செய்திகள்
யுனைடெட் ஏர்லைன்ஸ்

அரசு கொடுத்த நிதி அனைத்தும் காலி - 16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய யுனைடெட் ஏர்லைன்ஸ் முடிவு

Published On 2020-09-02 21:43 GMT   |   Update On 2020-09-02 21:43 GMT
அமெரிக்க அரசு கொடுத்த உதவி நிதி இம்மாதத்துடன் தீர்ந்து விடுவதால் 16 ஆயிரத்து 370 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வாஷிங்டன்:

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், பல மாதங்களாக விமான போக்குவரத்து நடைபெறாததால் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள் திவாலாகி வருகின்றன.

ஒரு சில விமான நிறுவனங்களுக்கு அந்நிறுவனத்தை சேர்ந்த நாடுகள் நிதி உதவி செய்து வருகின்றன. இதனால் விமான ஊழியர்களின் வேலை உறுதிபடுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் ஏர்லைசும் கொரோனா காரணமாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. 

நிதி நிலையை சமாளிக்கவும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு 25 பில்லியன் டாலர்களை கடந்த மார்ச் நிதியாக வழங்கியது.

இதனால், ஊழியர்களுக்கு சம்பளம் போன்ற பல்வேறுவகையிலான பிரச்சனைகளுக்கு பல மாதங்கள் தீர்வு கிடைத்துவந்தது. ஆனால், அமெரிக்க அரசு கொடுத்த நிதி இம்மாதத்துடன் காலியாகுகிறது.

இந்த நிலைமையை சரிகட்ட மேலும் 25 பில்லியன் டாலர்களை நிதியுதவி வழங்கவேண்டும் என  யுனைடெட் ஏர்லைன்ஸ் சார்பில் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

ஆனால், ஏர்லைன்சுக்கு நிதியுதவி வழங்க அனுமதிப்பது தொடர்பாக அமெரிக்க காங்கிரஸ் இதுவரை ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை. இதனால் நிதி உதவி அளிப்பது தொடர்பாக முடிவெடுப்பதில் அமெரிக்க அரசுக்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அரசு வழங்கிய நிதி இந்த மாதத்துடன் தீர்ந்து விடுவதாலும், அடுத்தகட்ட நிதி உதவி தொடர்பான எந்த முடிவுகளையும் அரசு தற்போது வரை எடுக்காததாலும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் யுனைடெட் ஏர்லைன்ஸ் இறங்கியுள்ளது.

சிக்காகோவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் யுனைடெட் ஏர்லைன்சில் மொத்தம் 90 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வந்தனர். 

தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதமாக 16 ஆயிரத்து 370 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக ஏர்லைன்ஸ் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலை நீக்க நடவடிக்கை அடுத்த மாதம் தொடக்கம் முதல் நடைமுறைக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நிதி உதவியை வழங்கவில்லை என்றால் அடுத்த மாதம் முதல் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதை தவிர வேறு வழி எதுவும் இல்லை என யுனைடெட் ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News