ரஷிய எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவல்னிக்கு நராம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தை கொடுத்துள்ளனர் என ஜெர்மனி அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
ரஷிய எதிர்க்கட்சி தலைவருக்கு நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷம் கொடுத்துள்ளனர் - ஜெர்மனி அதிர்ச்சி தகவல்
பதிவு: செப்டம்பர் 03, 2020 02:02
ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி
பெர்லின்:
ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த போட்டங்களில் போது இவர் கைது நடவடிக்கைகளையும் சந்தித்துள்ளார்.
நவல்னி கடந்த 20 ஆம் தேதி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது
நேரத்தில் நவல்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அவசர அவசரமாக ஒம்சக் நகரிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டு நவல்னி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
ஒம்சக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவல்னியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நவல்னிக்கு கூடுதல் சிகிச்சையளிக்க ஜெர்மனி முன்வந்தது. உடனடியாக ரஷிய அரசின் அனுமதியுடன் நவல்னி ஒம்சக் நகரில் இருந்து ஜெர்மனி நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டார்.
பெர்லினில் வைத்து நவல்னிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர் தொடர்ந்து கோமா நிலையிலேயே உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நவல்னிக்கு நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தை கொடுத்துள்ளனர் என ஜெர்மனி தெரிவித்துள்ளது. நவல்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு நரம்பு மண்டலத்தை தாக்கி, நரம்பு மண்டலத்திற்கும் தசைகளுக்கும் இடையேயான தொடர்பை துண்டிக்கக்கூடிய நோவிசோக் என்ற கொடிய விஷம் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நோவிசோக் என்ற இந்த விஷம் திரவ வடிவிலும், துகள் வடிவிலும் (பவுடர்கள்) இருக்கும். இந்த விஷம் நரம்பு மண்டலத்தை தாக்கி மனித உடலை செயலற்ற நிலைக்கு கொண்டு செல்லும் கொடிய தன்மை உடையது.
இந்த வகை விஷம் மற்ற ரசாயன ஆயுதங்களை விட பல மடங்கு கொடிய விஷத்தன்மை கொண்டதாகும். கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வசித்து வந்த ரஷியாவின் முன்னாள் உளவாளி ஸ்கிர்ப்பல் மற்றும் அவரது மகள் யூலியாவுக்கு அதேபோன்ற நரம்பு மண்டலத்தை தாக்கக்கூடிய விஷம் கொண்டுக்கப்பட்டது. இந்த சம்பவத்திலும் ரஷியாவின் பின்னனி இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியானது.
தற்போது எதிர்கட்சி தலைவராக இருந்த நவல்னி அதேபோன்று கொடிய விஷத்தன்மை உடைய ரசாயனத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கும் ரஷிய அதிபர் புதின் தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ரஷிய தலைமையிடமான கிரிம்லின் பகீரங்கமாக மறுத்துள்ளது.
Related Tags :