செய்திகள்
பேஸ்புக் நிறுவனம்

ஆஸ்திரேலியா அரசுக்கு பேஸ்புக் நிறுவனம் மிரட்டல்

Published On 2020-09-02 00:22 GMT   |   Update On 2020-09-02 00:22 GMT
பேஸ்புக் நிறுவனம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் செய்திகள் பகிரும் வசதியையே நிறுத்த போவதாக ஆஸ்திரேலியா அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.
சிட்னி:

ஆஸ்திரேலியாவில் கொரோனா பொது முடக்கம் காரணமாக ஊடகங்கள் விளம்பர வருமானத்தை இழந்து வரும் நிலையில், ‘பேஸ்புக்’ ‘கூகுள்’ போன்ற டிஜிட்டல் தளங்கள் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வெளியிட்டு வருமானம் பார்த்து வருகின்றன.

இதற்கு கடிவாளம் போடும் வகையில் ஆஸ்திரேலிய அரசு புதிய சட்டம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

அதன்படி ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் வெளியிட்டால் அதற்குரிய கட்டணத்தை ஊடக நிறுவனங்களுக்கு செலுத்த வழிவகை செய்யும் வகையில் சட்டம் கொண்டுவர ஆஸ்திரேலிய அரசு முடிவெடுத்திருக்கிறது.

இதன் மூலம், கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்களின் 6 பில்லியன் டாலர் விளம்பர வருவாய், செய்தி நிறுவனங்களுக்கு செல்ல நேரிடும்.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவனம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் செய்திகள் பகிரும் வசதியையே நிறுத்த போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

இதேபோல் கூகுள் நிறுவனமும் ஆஸ்திரேலிய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News