செய்திகள்
கோப்புப்படம்

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலி

Published On 2020-08-31 22:11 GMT   |   Update On 2020-08-31 22:11 GMT
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக இருந்து வருகிறது. தலீபான், அல் கொய்தா உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாத அமைப்புகள் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவர்கள் அண்டை நாடுகளில் பயங்கரவாதத்தை பரப்பி வருவதோடு உள்நாட்டிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவ வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட ஒரு இடத்தை ராணுவ வீரர்கள் நெருங்கிய போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் ராணுவ வீரர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து தாக்குதல் நடந்த இடத்தில் கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News