செய்திகள்
பிளாஸ்மா சிகிச்சை

பிளாஸ்மா சிகிச்சை இன்னும் பரிசோதனை கட்டத்திலேயே உள்ளது - உலக சுகாதார அமைப்பு

Published On 2020-08-24 23:26 GMT   |   Update On 2020-08-24 23:26 GMT
பிளாஸ்மா சிகிச்சை இன்னும் பரிசோதனை கட்டத்திலேயே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
ஜெனீவா:

கொரோனா தடுப்பூசி இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், கொரோனா சிகிச்சை முறைகளில் ஒன்றாக பிளாஸ்மா சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களிடம் தானமாக பெறப்பட்ட பிளாஸ்மாவை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அமெரிக்காவில், பிளாஸ்மா சிகிச்சைக்கு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார். ஆனால், இந்த சிகிச்சை முறையை உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்கவில்லை. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவும்யா சுவாமிநாதன் கூறியதாவது:-

பிளாஸ்மா சிகிச்சை இன்னும் பரிசோதனை கட்டத்தில்தான் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கருதுகிறது. அதன் ஆரம்பகட்ட முடிவுகள், இன்னும் அரைகுறையாகவே உள்ளன.

கடந்த நூற்றாண்டில் கூட பல்வேறு தொற்றுநோய்களை குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் வெற்றி விகிதம் வெவ்வேறாக இருக்கிறது. எனவே, அதன் பயன்பாட்டை தொடர்ந்து மதிப்பிட வேண்டும். இதுதொடர்பான ஆய்வுகள் சிறிய அளவிலேயே நடக்கின்றன. குறைவான ஆதாரங்களே கிடைத்துள்ளன.

அதை தரப்படுத்துவது கடினம். ஒவ்வொருவரிடமும் நோய் எதிர்ப்பு சக்தி வேறுபடும் என்பதால், குணமடைந்த ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பிளாஸ்மா சேகரிக்க வேண்டும்.

ஆபத்தை விட பலன்கள் அதிகமாக இருப்பதாக கருதினால், அவசர தேவைக்கு பிளாஸ்மா சிகிச்சையை நாடுகள் பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘‘பிளாஸ்மா சிகிச்சையால் லேசான குளிர் காய்ச்சல் முதல் கடுமையான நுரையீரல் பாதிப்புவரை பக்க விளைவுகள் ஏற்படும்’’ என்று உலக சுகாதார அமைப்பு தலைமை இயக்குனரின் மூத்த ஆலோசகர் டாக்டர் புரூஸ் அயில்வார்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News