செய்திகள்
மந்திரி டாரா காலரி

அயர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய மந்திரி ராஜினாமா

Published On 2020-08-22 20:48 GMT   |   Update On 2020-08-22 20:48 GMT
அயர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய மந்திரி டாரா காலரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
டப்ளின்:

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ளது.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு பல்வேறு சுகாதார கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதோடு ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கி வருகிறது.

அந்த வகையில் பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 200 பேர் வரை பங்கேற்க வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரத்து செய்துவிட்டு அதிகபட்சம் 15 பேர் மட்டுமே கூட வேண்டும் என்கிற புதிய கட்டுப்பாட்டை அந்த நாட்டு அரசு விதித்துள்ளது.

இந்த நிலையில் தலைநகர் டப்ளினில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற இரவு விருந்தில் அந்த நாட்டின் விவசாயத் துறை மந்திரி டாரா காலரி கலந்து கொண்டார். இந்த விருந்து நிகழ்ச்சியில் அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அரசின் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி மந்திரி விருந்தில் கலந்து கொண்டதாக சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து மந்திரி டாரா காலரி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக பிரதமர் மைக்கேல் மார்ட்டின் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “நாடு முழுவதுமுள்ள மக்கள் கொரோனா விதிமுறைகளுக்கு இணங்க தங்கள் குடும்ப வாழ்க்கையிலும், தங்கள் தொழில்களிலும் மிகவும் கடினமான தியாகங்களை செய்துள்ளனர். இப்படியான சூழலில் மந்திரி அந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தவறானது” என கூறினார்.
Tags:    

Similar News