செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா இணைய வாய்ப்பு - டிரம்ப்

Published On 2020-08-20 23:13 GMT   |   Update On 2020-08-20 23:13 GMT
இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் மற்றொரு அரபு நாடான சவுதி அரேபியா இணைய வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே தூதரக நல்லுறவை ஏற்படுத்துவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.

அமெரிக்காவின் மத்தியஸ்தம் மூலம் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், 3-வது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியுள்ளது.

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான இந்த அமைதி ஒப்பந்தத்தை பாலஸ்தீனம், துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன.

இந்த நிலையில் இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் மற்றொரு அரபு நாடான சவுதி அரேபியா இணைய வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இதுகுறித்து கூறியதாவது:-

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா பங்கேற்க விரும்பும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அப்படி விரும்பினால் அதை சாத்தியமாக்குவதற்கான வேலைகளை நான் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News