செய்திகள்
கொரோனா பரிசோதனை

கொரோனா தடுப்பூசி பற்றிய கூடுதல் தகவல்கள் பெற ரஷியாவுடன் உலக சுகாதார நிறுவனம் பேச்சுவார்த்தை

Published On 2020-08-15 08:51 GMT   |   Update On 2020-08-15 08:51 GMT
ரஷியா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி பற்றிய கூடுதல் தகவல்களை பெற அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜெனீவா:

உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுத்து நிறுத்தும் வகையில், ஸ்புட்னிக்-5 என்ற பெயரில் உலகின் முதலாவது தடுப்பூசியை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக ரஷியா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. இது குறித்து அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் கூறுகையில், “உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை ரஷியா பதிவு செய்துள்ளது” என்று குறிப்பிட்டு உலகை அதிர வைத்தார். ஆனால் தடுப்பூசி உருவாக்கத்தில் பல்லாயிரகணக்கானோருக்கு செலுத்தி சோதிக்கும் மூன்றாவது கட்ட பரிசோதனை குறித்த விவரங்களை அந்த நாடு வெளியிடாதது, உலக நாடுகளை சந்தேகப்பார்வை பார்க்க வைத்தது. தடுப்பூசி விஷயத்தில் ரஷியா அவசரப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.



ஆனால் அந்த நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ, கொரோனா தடுப்பூசி உற்பத்தி அடுத்த 2 வாரங்களில் தொடங்கும் என கூறி மேலும் பரபரக்க வைத்தார். அது மட்டுமல்லாமல், இந்த தடுப்பூசி தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் ஆதாரமற்றவை எனவும் அவர் நிராகரித்தார்.

இந்த சூழலில் சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் புரூஸ் அய்ல்வார்டு நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் ரஷிய தடுப்பூசி விவகாரத்தை கையில் எடுத்தார். அவர் கூறும்போது, “ரஷியாவின் தடுப்பூசி பற்றி முடிவு செய்வதற்கு எங்களிடம் (உலக சுகாதார நிறுவனத்திடம்) போதிய தகவல்கள் இல்லை. உலக சுகாதார நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில், மொத்தம் 9 தடுப்பூசிகள் இரண்டாவது அல்லது மூன்றாவது கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் ரஷிய தடுப்பூசி, அந்த 9 தடுப்பூசிகளில் ஒன்றாக இல்லை” என கூறினார்.

மேலும், இந்த தடுப்பூசி பற்றிய கூடுதல் தகவல்களை பெறுவதற்கு உலக சுகாதார நிறுவனமானது, ரஷியாவுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ரஷியா, தான் உருவாக்கியுள்ள தடுப்பூசி பற்றிய விவரங்களை வெளியிடவில்லை என்று உலகளவில் எழுந்துள்ள விமர்சனத்துக்கு பதில் அளிக்கும் வகையில் அந்த நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி பற்றிய விமர்சனங்கள், பெரும்பாலும் சோதனைகள் பற்றிய தகவல்கள் இல்லாததால் வெளியானவை ஆகும்.

ஏற்கனவே 6 தடுப்பூசிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மேடையில்தான் எங்கள் தடுப்பூசி பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று அல்ல.

வரும் நாட்களில், அனேகமாக திங்கட்கிழமையன்று எங்கள் தடுப்பூசியின் முன் மருத்துவ மற்றும் மருத்துவ பரிசோதனைகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News