செய்திகள்
மொசாம்பிக்

மொசாம்பிக் துறைமுகத்தை பயங்கரவாதிகள் கைப்பற்றினர்

Published On 2020-08-14 01:00 GMT   |   Update On 2020-08-14 01:00 GMT
மொசாம்பிக் துறைமுகத்தை பயங்கரவாதிகள் கைப்பற்றி தங்கள் ஆளுகையின்கீழ் கொண்டு வந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாபுட்டோ:

ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். கடந்த சில மாதங்களாகவே அந்த நாட்டின் வட பகுதியில் உள்ள நகரங்களை பயங்கரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம் பெயர்ந்துள்ளனர்.

அங்குள்ள முக்கிய துறைமுகங்களில் ஒன்றான மொசிம்போ டா பிரையா துறைமுகத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் பயங்கரவாதிகள் பல முறை தாக்குதல்கள் நடத்தி வந்துள்ளனர்.

இந்தநிலையில் அங்கு குவிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படையினருடன் பல நாள் பலத்த சண்டையிட்டு வந்த பயங்கரவாதிகள், அந்த துறைமுகத்தை கைப்பற்றி தங்கள் ஆளுகையின்கீழ் கொண்டு வந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அங்கு முற்றுகையிட்டிருந்த பாதுகாப்பு படையினர் படகுகளில் ஏறி தப்பி விட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த துறைமுகம், 60 மில்லியன் டாலர் (சுமார் ரூ.450 கோடி) இயற்கை எரிவாயு திட்ட இடத்துக்கு அருகில் அமைந்திருப்பதும், எண்ணெய் திட்டங்களுக்கு சரக்குகள் வினியோகிக்க பயன்படுத்தப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த துறைமுகம் பயங்கரவாதிகள் பிடியில் வீழ்ந்திருப்பது, உள்நாட்டு பாதுகாப்பு படைகளுக்கு விழுந்துள்ள பலத்த அடியாக பார்க்கப்படுகிறது.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் பாதுகாப்பு படைவீரர்களை கொன்றுவிட்டு, மொசிம்போ டா பிரையா துறைமுகத்துக்கு அருகே அமைந்துள்ள 2 ராணுவ தளங்களை கைப்பற்றியுள்ளதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிவித்திருந்தனர்.

இந்தநிலையில் இப்போது அவர்களின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் மொசிம்போ டா பிரையா துறைமுகத்தை கைப்பற்றி இருப்பது அரசுக்கு பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது.
Tags:    

Similar News