செய்திகள்
சீனா வெளியுறவுத்துறை துணை மந்திரி லூவோ ஜாவோ

முக்கிய நலன்களில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும்: நேபாளத்திடம் சீனா பேச்சு

Published On 2020-08-13 10:35 GMT   |   Update On 2020-08-13 10:35 GMT
சீனாவும் நேபாளமும் ஒருவருக்கொருவர் இணைந்து முக்கியமான நலன்களில் ஆதரவாக இருக்க வேண்டும் என சீனாவின் வெளியுறவுத்துறை துணை மந்திரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக மோதல் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது நேபாளம். குறிப்பாக அதன் பிரதமர் ஷர்மா ஒலி இந்தியாவை சீண்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். குறிப்பாக, வரைபடத்தை மாற்றியமைத்து இந்தியாவை கோபப்படுத்தியதோடு, ராமர் தங்களது நாட்டில் பிறந்தவர் என, சர்ச்சைக்குரிய கருத்தையும் கூறி பெரும் எதிர்ப்புகளையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சீனாவும் நேபாளமும் இணைந்து செயல்பட வேண்டும் என சீன தரப்பு கூறியுள்ளது. நேபாளத்துடன் சீனா நெருக்கம் காட்டுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சீனாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் லூவோ ஜாவோ ஹுய் மற்றும் நேபாளத்தின் வெளியுறவு செயலாளர் சங்கர் தாஸ் ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, 13-வது சுற்று ராஜாங்க ரீதியிலான ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.

அப்போது சீனாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் லூவோ ஜாவோ ஹுய் கூறியதாவது:-

கடந்த ஆண்டு நேபாளத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை தந்தபோது செய்யப்பட்ட ஒப்பந்தங்களை, இருநாடுகளும் மிகுந்த கவனம் செலுத்தி நிறைவேற்ற வேண்டும். கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்தை இணைந்து செயல்படுத்த வேண்டும். 'ஒன் பெல்ட் ஒன் ரோடு' என்ற சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
முக்கியமான விவகாரங்களில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். சர்வதேச அளவில் நமது ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் பல 'பில்லியன் டாலர் பெல்ட்' சாலை திட்டம் திபெத் வழியாக டிரான்ஸ் இமயமலை பிராந்திய இணைப்பை நோக்கமாக கொண்டது. சீனாவின் திட்டங்களில் திபெத்தின் ஜிலாங் முதல் காத்மாண்டு வரையிலான சாலையில் சுரங்கப்பாதைகள் அமைத்தல், நேபாளத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை அமைத்தல், நேபாளத்தின் மூன்று காரிடார்கள் அமைப்பது உள்ளிட்டவை அடங்கும். இந்த திட்டங்களுக்காக, சீனாவுக்கு நேபாளம் ஆதரவு அளித்து வருகிறது.

ஏற்கனவே பாகிஸ்தானுடன் கரகோரம் ஹைவே என்ற பெயரில் பொருளாதார காரிடார் சாலை திட்டத்தை செயல்படுத்துகிறது சீனா. இதேபோல், நேபாளத்திலும் சாலை முதலீடுகளை செய்கிறது. பாகிஸ்தானை போலவே, சீனாவுடன் நட்பு பாராட்டி நெருக்கம் காட்டி வருகிறது நேபாளம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News