செய்திகள்
உயிர் தப்பிய கர்ப்பிணி ஜஸ்லின் ஒமர் தனது கணவர் இஜாஸ் ஒமருடன் உள்ளார்.

கோழிக்கோடு விமான விபத்தில் உயிர் தப்பிய கேரளாவை சேர்ந்த கர்ப்பிணி

Published On 2020-08-09 11:07 GMT   |   Update On 2020-08-09 11:07 GMT
கேரளாவை சேர்ந்த கர்ப்பிணி மருத்துவ சான்றிதழ் கிடைக்காததால் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்தார். இதனால் கோழிக்கோடு விமான விபத்தில் இருந்து அவர் உயிர் தப்பினார்.
துபாய்:

துபாயில் இருந்து கோழிக்கோடு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் சார்ஜாவில் வசித்து வரும் கர்ப்பிணியான கேரளாவைச் சேர்ந்த ஜஸ்லின் ஒமர் பயணம் செய்ய இருந்தார். அவருக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ சான்றிதழ் கிடைப்பது தாமதமானது.

இதையடுத்து, அவர் தனது பயண திட்டத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்தார். இதன் காரணமாக அவர் இந்த விமான விபத்தில் இருந்து உயிர் தப்பினார். இவரது கணவர் இஜாஸ் ஒமர் சார்ஜாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இது குறித்து ஜஸ்லின் ஒமர் கூறியதாவது:-

விமான விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். எனினும் மருத்துவ சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் விமான பயணத்தை மேற்கொள்ளவில்லை.

ஏற்கனவே இந்த விமானத்தில் பயணம் செய்ய இருப்பதாக உறவினர்களிடம் தெரிவித்து இருந்தேன். இதனால் உறவினர்கள் பலர் போன்செய்து தொடர்ந்து விசாரித்த வண்ணம் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரளா மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் முகம்மது அலி. இவர் சார்ஜாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி செனோபியா அலி (வயது 40), மகன்கள் அசம் அலி (15) மற்றும் அகமது அலி (5) ஆகியோர் துபாயில் இருந்து கோழிக்கோடு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்தனர். முகம்மது அலியின் 19 வயது மகள் கேரளாவில் படித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக சென்ற போது இந்த விமான விபத்தில் சிக்கினர்.

இதில் செனோபியா அலி பரிதாபமாக இறந்தார். அவரது மகன்கள் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவரது கணவர் முகம்மது அலி நேற்று இந்திய துணைத் தூதரகம் வழங்கிய விமான பயணச்சீட்டின் உதவியுடன் கேரளா புறப்பட்டு சென்றார்.

அபுதாபியைச் சேர்ந்த அப்சல் (வயது 26) மற்றும் நூபல் ஆகியோர் விசாவுக்கான அபராதம் காரணமாக அவர்களால் கோழிக்கோடு சென்ற விமானத்தில் பயணம் செய்ய முடியவில்லை. இதனால் இந்த விபத்தில் இருந்து அவர்களும் உயிர் தப்பினர்.

துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் கேரளாவைச் சேர்ந்த அதிப் முகம்மது வேலை செய்து வருகிறார். இவரது கர்ப்பிணி மனைவி மனால் என்பவர் கோழிக்கோடு சென்ற விமானத்தில் பயணம் செய்தார். அவர் விபத்தில் சிக்கி இறந்தார்.

இதையடுத்து அவரது கணவர் அதிப் முகம்மது நேற்று கோழிக்கோடு சென்ற விமானத்தில் அவரது தயாருடன் இறுதிச் சடங்கில் பங்கேற்க பயணம் செய்தார். இருவரும் சமீபத்தில் தங்களது முதலாம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் நேற்று காலை 8 மணி முதல் தேவையான ஆலோசனைகளை வழங்கியது.
Tags:    

Similar News