செய்திகள்
கோப்புப்படம்

நியூசிலாந்தில் 100 நாட்களாக கொரோனா பரவல் ஏற்படவில்லை- அரசு அறிவிப்பு

Published On 2020-08-09 09:10 GMT   |   Update On 2020-08-09 09:10 GMT
நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களாக உள்ளூர் மக்கள் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை என அரசு அறிவித்துள்ளது.
நியூசிலாந்து:

உலகளவில் இதுவரை 1,98,11,817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7,29,661 பேர் உயிரிழந்துள்ளனர். வளர்ந்த பொருளாதாரமும், வலுவான சுகாதார கட்டமைப்பும் உள்ள நாடுகள் கூட கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் நியூசிலாந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததையடுத்து, நியூசிலாந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அந்நாட்டிற்கு வருபவர்கள் சிலருக்கு தொற்று உறுதியாகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் முறையாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களாக உள்ளூர் மக்கள் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை என அரசு அறிவித்துள்ளது. ஆனால் சுகாதார நடவடிக்கைகளை மக்கள் கைவிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது. தற்போது 23 பேர் மட்டுமே கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்கள் அனைவரும் நாட்டிற்குள் நுழையும் போது பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நியூசிலாந்து அரசு கூறுகையில், ‘கொரோனா பரவல் இல்லாமல் 100 நாட்களை கடப்பது மிகப்பெரிய மைல்கல். ஆனால் நாம் அனைவரும் மனநிறைவுடன் இருக்க முடியாது. எதிர்காலத்தில் மீண்டும் கொரோனா பரவல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

நியூசிலாந்து நாடு சமூகப் பரவலை வெற்றிகரமாக நீக்கியதற்கு உலக சுகாதார அமைப்பு ஏற்கெனவே பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News