செய்திகள்
நவீன தொழில்நுட்ப உதவியுடன் கொரோனா பரிசோதனை செய்யப்படும் காட்சி.

லேசர் தொழில்நுட்ப உதவியுடன் விரைவான கொரோனா பரிசோதனை

Published On 2020-08-07 12:24 GMT   |   Update On 2020-08-07 12:24 GMT
துபாய்-அபுதாபி எல்லைப் பகுதியில் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு லேசர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் விரைவான மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.
அபுதாபி:

துபாய்-அபுதாபி எல்லைப் பகுதியில் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு லேசர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் விரைவான மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

துபாய்-அபுதாபி இடையே பயணம் செய்பவர்கள் கொரோனா பரிசோதனை செய்வதற்காக கந்தூத் பகுதியில் கொரோனா பரிசோதனை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தில் தினமும் சராசரியாக 6 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகை விடுமுறையின் போது இந்த எண்ணிக்கையானது நாள்தோறும் 10 ஆயிரம் வரை அதிகரித்தது.

இந்த பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்ள லேசர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு வரும் தங்களது அமீரக அடையாள அட்டையை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் பணத்தை செலுத்த வேண்டும். இதற்கான கட்டணம் 50 திர்ஹாம் ஆகும். பரிசோதனை மேற்கொள்ள 53 பரிசோதனை கவுண்டர்கள் உள்ளன. இந்த மையமானது கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்டது. சில நேரங்களில் 20 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனையடுத்து ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

இந்த பரிசோதனை முடிவுகளில் கொரோனா இல்லை என்றால் அபுதாபிக்கு தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். இந்த சோதனை முடிவானது எஸ்.எம்.எஸ். மூலம் சம்பந்தப்பட்ட நபரின் செல்போனுக்கு அனுப்பி வைக்கப்படும். கொரோனா பாசிட்டிவ் இருந்தால் அவருக்கு ஸ்வாப் சோதனை செய்யப்படும்.

பயணிகளுக்கு 37 டிகிரி செல்சியசுக்கு அதிகமான உடல் வெப்பநிலை இருக்கும் பட்சத்தில் அது கொரோனாவுக்கான அறிகுறியாக கொள்ளப்படும். எனவே இங்கு பரிசோதனைக்காக வருபவர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வந்தால் விரைவாக பரிசோதனை செய்ய உதவியாக இருக்கும். எனவே முன்பதிவு செய்து வருமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News