செய்திகள்
குழந்தை

சார்ஜாவில் மருத்துவமனை நுழைவு வாயிலில் சென்னை பெண்ணுக்கு பிரசவம்

Published On 2020-08-07 12:10 GMT   |   Update On 2020-08-07 12:10 GMT
சார்ஜாவில் வசித்து வரும் சென்னையை சேர்ந்த பெண்ணுக்கு மருத்துவமனை நுழைவுவாயிலில் குழந்தை பிறந்தது.
சார்ஜா:

சென்னை போரூரை சேர்ந்தவர் ஜாகீர் அசாருதின். இவர் சார்ஜாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு பர்வீன் பானு என்ற மனைவியும் தஸ்சீன் (7) என்ற மகளும் உள்ளனர். மேலும் இவர் சார்ஜாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நிறைமாத கர்ப்பினியாக இருந்த பர்வீன் பானுவுக்கு வருகிற 16-ந் தேதி பிரசவத்திற்கான தேதி குறிக்கப்பட்டது. இதற்காக அஜ்மானில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க முன்பதிவு செய்யப்பட்டது.

ஆனால் அதற்கு முன்னதாகவே கடந்த 4-ந் தேதி காலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது கணவர் காரில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். கடும்போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆஸ்பத்திரிக்கு செல்வது தாமதமானது. காரில் வரும் வழியிலேயே குழந்தை பிறக்க தொடங்கியது.

ஜாகீர் அசாருதின் சார்ஜாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அளித்த தகவலின் பேரில், மருத்துவமனை நுழைவுவாயிலுக்கு டாக்டர் ஹாலா அல் தாயி மற்றும் மருத்துவ குழுவினர் விரைந்து வந்தனர். பின்னர் நுழைவுவாயிலில் வைத்து காரிலேயே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை வெகு நேரம் வெளியில் இருந்ததால் கிருமி தொற்று ஏற்படாமல் இருக்க தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பர்வீன் பானு தினத்தந்தி நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த சம்பவத்தை நான் எதிர்பார்க்கவில்லை. இறைவன் என்னை காப்பாற்றினான் என்றே கூறவேண்டும். வீட்டில் வலி ஏற்பட்டு காரில் வரும்போது பாதி வழியிலேயே குழந்தை வெளியில் வருவதை நான் உணர்ந்தேன். மருத்துவமனையை அடையும்போது எனக்கு குழந்தை பிறந்து விட்டது.

பிறகு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன். இந்த சம்பவத்தை என்னால் எப்போதும் மறக்கமுடியாது. எனக்கும், என் குழந்தைக்கும் சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினருக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். எனது குழந்தைக்கு அப்சீன் என பெயர் வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News