செய்திகள்
விடுதலையான ஜாங் யுகுவான்

சீனாவில் கொலை வழக்கில் 27 ஆண்டுகள் தவறான சிறைவாசத்துக்கு பின்னர் கைதி விடுதலை

Published On 2020-08-07 03:42 GMT   |   Update On 2020-08-07 03:42 GMT
சீனாவில் கொலை வழக்கில் ஜாங் யுகுவான் என்பவர் 27 ஆண்டு காலம் தவறான சிறைவாசம் அனுபவித்து விடுதலையாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீஜிங் :

சீனாவில் 1993-ம் ஆண்டு 2 சிறுவர்களை கொலை செய்த வழக்கில் ஜாங் யுகுவான் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக விசாரணை நீதிமன்றம் கருதி 1995-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. ஆனால் அவர் 2 ஆண்டு காலம் சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில், அவரது மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

மொத்தத்தில் அவர் இந்த வழக்கில் 27 ஆண்டு காலமாக சிறைவாசம் அனுபவித்து வந்தார். ஆனால் அவர் போலீசாரின் சித்ரவதையால் 2 சிறுவர்களையும் தான் கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க நேர்ந்தது என்பதுதான் உண்மை. இந்த வழக்கு குறித்து சந்தேகங்கள் எழுந்து மறு விசாரணை நடந்தது. ஐகோர்ட்டில் நடந்த விசாரணையில், அவரது ஒப்புதல் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பதாகவும், அது நடந்த குற்றத்துடன் பொருந்திவரவில்லை என்றும் வாதிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர் மீதான கொலைக்குற்றச்சாட்டை நிரூபிக்க தகுந்த ஆதாரம் இல்லை என்று ஐகோர்ட்டு கூறி அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து அவர் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜாங் யுகுவானை 2 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில், 11 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது மனைவி சாங் ஸியான்யு விவாகரத்து செய்து விட்டு: மறுமணம் செய்து கொண்டார்.

ஆனாலும் தனது முன்னாள் கணவர், கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டதில் இருந்து வெளியே வர தன்னால் ஆன சட்ட உதவிகளை செய்துள்ளார் என்பதுவும் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. கடைசியில் தனது முன்னாள் கணவர் நிரபராதி என கோர்ட்டால் இப்போது விடுதலை செய்யப்பட்டிருப்பது கண்டு அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “கோர்ட்டின் தீர்ப்பைக் கேட்டபோது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்” என கூறினார். தவறாக சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்ததற்காக ஜாங் யுகுவான் இழப்பீடு பெற முடியும் என்று ஐகோர்ட்டு கூறி உள்ளது. எவ்வளவு இழப்பீடு கோருவது என்பதை ஜாங் யுகுவானிடம் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது வக்கீல் வாங் பெய் தெரிவித்தார். கொலை வழக்கில் 27 ஆண்டு காலம் தவறான சிறைவாசம் அனுபவித்து ஜாங் யுகுவான் விடுதலையாகி இருப்பது சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News