செய்திகள்
டிரம்ப் மற்றும் ஜி ஜிங்பிங்

உலக வர்த்தக அமைப்புக்குள் சீனா நுழைந்தது மிகவும் மோசமான ஒன்று - டிரம்ப்

Published On 2020-08-07 00:48 GMT   |   Update On 2020-08-07 00:48 GMT
உலக வர்த்தக அமைப்புக்குள் சீனா நுழைந்தது இதுவரையிலான ஒப்பந்தங்களிலேயே மிகவும் மோசமான ஒன்று என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த ஆண்டு தொடக்கம் முதல் வர்த்தகபோர் நடந்து வருகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரித்தொகையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல மடங்கு உயர்த்தினார். 

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவும் அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கான வரியை பல மடங்கு உயர்த்தியது.

இந்த வர்த்தகப்போர் தீவிரமடைந்து வந்த நேரத்தில் கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. தற்போது உலகையே உலுக்கி வரும் இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்கா பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. அந்நாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர்.

இதனால் சீனா மீதான அமெரிக்க அதிபர் டிரம்பின் கோபம் உச்சத்தை அடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக சீனா மீது பல்வேறு பொருளாதாரத்தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகமோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் உலக வர்த்தக அமைப்பில் அங்கம் வகிக்கும் சீனா அதன் விதிகளை மீறிவிட்டதாக அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து இன்று வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறுகையில்,’உலக சுகாதார அமைப்புக்குள் சீனா நுழைந்தது தான் இதுவரையிலான ஒப்பந்தங்களிலேயே மிகவும் மோசமான ஒன்று. உங்களுக்கு உண்மை தெரியவேண்டுமென்றால்... அந்த அமைப்பில் இதுவரை எந்த நாடுகளும் மீறாத விதிமுறைகளை சீனா மீறியுள்ளது’ என்றார். 
Tags:    

Similar News