செய்திகள்
லெபனான் விபத்து

அதிபயங்கர வெடிவிபத்தில் 135 பேர் பலி - லெபனான் துறைமுக அதிகாரிகளுக்கு வீட்டுக்காவல்

Published On 2020-08-06 20:11 GMT   |   Update On 2020-08-06 20:11 GMT
லெபனான் நாட்டு துறைமுகத்தில் நடந்த அதிபயங்கர வெடிவிபத்தில் 135 பேர் பலியான நிலையில், துறைமுக அதிகாரிகள் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
பெய்ரூட்:

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுக சரக்கு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் கடந்த 4-ந் தேதி மாலை அதிபயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. மனித வரலாற்றில் அணுசக்தி இன்றி நடந்த மிகப்பெரிய வெடிவிபத்தாக பதிவு செய்யத்தக்க அளவில் இது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வெடி விபத்தில் அந்த துறைமுகம் உருக்குலைந்து சின்னாபின்னமானது. 135 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 4 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 3 லட்சம் பேர் வீடுகளை இழந்து நடுரோட்டுக்கு வந்து விட்டனர். மக்கள் தங்கள் அன்றாட தேவைகளான, அத்தியாவசிய தேவைகளான உணவு, உடைகள், உறைவிடம் இல்லாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்த கோர விபத்துக்கு காரணம், துறைமுகத்தில் பாதுகாப்பற்ற சேமிப்புகிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்தான் என்று அந்த நாட்டின் அதிபர் மைக்கேல் அவுன் உறுதி செய்துள்ளார்.



அதே நேரத்தில், இந்த விபத்துக்கு காரணம், அதிகார வர்க்கத்தின் அலட்சியப்போக்கு, ஊழல், தவறான நிர்வாகம் ஆகியவைதான் என்று பெய்ரூட் மக்கள் ஆவேசத்துடனும், கோபத்துடனும் குற்றம் சுமத்துகின்றனர்.

அந்த நகரில் 2 வார கால அவசர நிலை அறிவித்து, அமல்படுத்தப்பட்டுள்ளது.

பெய்ரூட் நிலை குறித்து அந்த நாட்டின் சினிமா பட இயக்குனர் ஜூட் செஹாப், பி.பி.சி. டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில், “ பெய்ரூட் அழுது கொண்டிருக்கிறது. அலறிக்கொண்டிருக்கிறது. மக்கள் வெறித்தனமாக இருக்கிறார்கள்.

அவர்கள் சோர்வாகவும் இருக்கிறார்கள். இந்த விபத்துக்கு காரணமானவர்களை சட்டத்தின் பிடியில் நிறுத்தி நீதி வழங்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு” என குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்து பெய்ரூட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிற சாடியா எல்மேச்சி நவுன் என்ற உள்ளூர்வாசி கூறும்போது, “நாங்கள் திறமையற்ற அரசால் வழிநடத்தப்படுகிறோம் என்பதை நான் எல்லா நேரத்திலும் அறிவேன். இது தகுதியற்ற அரசு. ஆனால் அவர்கள் இப்போது செய்திருப்பது முற்றிலும் கிரிமினல் குற்றம்” என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே விபத்துக்கு காரணம் என கருதப்படுகிற பெய்ரூட் துறைமுக அதிகாரிகளை அந்த நாட்டு அரசு வீட்டுக்காவலில் வைத்தது.

நாட்டின் சுப்ரீம் பாதுகாப்பு கவுன்சில், இந்த வெடிவிபத்துக்கு காரணமானவர்கள் அதிகபட்ச தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளது.

சம்பவம் நடந்த பகுதியை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டு ‘சீல்’ வைத்துள்ளனர்.

மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்களையும், உயிர் பிழைத்தவர்களையும் தொடர்ந்து தேடி வருகின்றனர். டஜன் கணக்கிலானவர்களை காணவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதற்கு மத்தியில் பல நாடுகள், லெபனானில் பரிதாப நிலையில் உள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றன. பிரான்ஸ் நாட்டில் இருந்து லெபனானுக்கு மீட்பு படையினர், மருத்துவ சாதனங்கள், 500 பேருக்கு சிகிச்சை அளிக்க ஏற்ற விதத்தில் நடமாடும் கிளினிக் ஆகியவற்றுடன் 3 விமானங்கள் விரைவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

ஐரோப்பிய நாடுகள், ரஷியா, துனிசியா, துருக்கி, ஈரான், கத்தார் ஆகிய நாடுகள் நிவாரண பொருட்களை அனுப்புகின்றன. மருத்துவ நிபுணர்களையும், மனிதாபிமான உதவிகளையும் அனுப்பி வைக்க தயார் என இங்கிலாந்து அறிவித்துள்ளது. 
Tags:    

Similar News