செய்திகள்
ஐ.நா. பொதுச்சபை

ஐ.நா.வின் ரகசிய அறிக்கை ஊடகங்களில் கசிந்தது எப்படி? - விசாரணை நடத்த ரஷியா கோரிக்கை

Published On 2020-08-06 17:46 GMT   |   Update On 2020-08-06 17:46 GMT
வடகொரியா தொடர்பான நிபுணர்கள் குழுவின் ரகசிய அறிக்கை ஊடகங்களில் கசிந்தது எப்படி என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டுமென ஐ.நா.வுக்கு ரஷியா கோரிக்கை விடுத்துள்ளது.
பியாங்யாங்:

வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகள் மற்றும் அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை கண்காணித்து வரும் ஐ.நா. நிபுணர் குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகொரியா குறித்த ரகசிய அறிக்கை ஒன்றை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பித்தது.

ஆனால் இந்த ரகசிய அறிக்கை சர்வதேச ஊடகங்களில் கசிந்தது. வடகொரியா அணு ஆயுத உற்பத்தியை தொடர்வதாகவும், சிறிய அளவிலான அணு ஆயுத கருவியை உருவாக்கி வருவதாகவும் ஐ.நா.வின் ரகசிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

வடகொரியாவின் அணு ஆயுத உற்பத்தி தொடர்பான செய்தி ஒருபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், ஐ.நா.வின் ரகசிய அறிக்கை ஊடகங்களில் கசிந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் வடகொரியா தொடர்பான நிபுணர்கள் குழுவின் ரகசிய அறிக்கை ஊடகங்களில் கசிந்தது எப்படி என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டுமென ஐ.நா.வுக்கு ரஷியா கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான ரஷியாவின் முதல் நிரந்தர துணைத் தூதர் டிமிட்ரி பாலியன்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் " வடகொரியா தொடர்பான ஐ.நா. நிபுணர்களின் ரகசிய அறிக்கை மீண்டும் பத்திரிகைகளுக்கு கசியக்கூடும் என்று வருத்தப் படுகிறோம். மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இத்தகைய நடைமுறைகளை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இது போன்ற ஒவ்வொரு சம்பவத்தையும் விசாரித்து அவற்றை தடுக்க ஐ.நா. முன்வர வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News