செய்திகள்
லெபனான் விபத்து

லெபனான் வெடிவிபத்து: 135 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை - 5 ஆயிரம் பேர் படுகாயம்

Published On 2020-08-05 22:16 GMT   |   Update On 2020-08-05 22:16 GMT
லெபனான் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது.
பெய்ரூட்:

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 4) பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் பெய்ரூட் துறைமுகப்பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக மாறியது.

பெய்ரூட் மட்டுமல்லாமல் அந்நகரில் இருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தீவுகளிலும் இந்த வெடிவிபத்தின் தாக்கம் உணரப்பட்டது. 

துறைமுகப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளது.

இந்த வெடிவிபத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. துறைமுகப்பகுதியே நிலைகுலைந்தது. வெடிவிபத்தில் 73 பேர் வரை உயிரிழந்திருந்ததாக நேற்று காலை  தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், பெய்ரூட் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி வெடிவிபத்தில் 135 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்த விபத்தில் பலர் மாயமாகியுள்ளதால் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு காணமல் போனவர்களை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதனால் பெய்ரூட் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
Tags:    

Similar News