செய்திகள்
புயல்

கொரோனா பேரிடருக்கு மத்தியில் அமெரிக்க மாகாணங்களை புரட்டி போட்ட புயல் - 6 பேர் பலி

Published On 2020-08-05 21:04 GMT   |   Update On 2020-08-05 21:04 GMT
கொரோனா பேரிடருக்கு மத்தியில் அமெரிக்க மாகாணங்களை சக்தி வாய்ந்த புயல் புரட்டிப் போட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்.
நியூயார்க்:

உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

அங்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையும், அந்தக் கொடிய வைரசின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இப்படி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் சூழலில், இயற்கைப் பேரிடர்களும் தன் பங்குக்கு அமெரிக்காவை உலுக்கி வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட டெக்சாஸ் மாகாணத்தை ஹன்னா என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலால் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தை இசையாஸ் என்ற சக்தி வாய்ந்த புயல் நேற்று முன்தினம் தாக்கியது. அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான இந்த புயல், வடக்கு கரோலினா மாகாணத்தில் ஓஷன் இஸ்லே கடற்கரை பகுதியில் கரையை கடந்தது.

அப்போது, மணிக்கு, 136 கி.மீட்டர் வேகத்துக்கும் அதிகமாக, பலத்த காற்று வீசியது. கடல் அலைகள், 5 அடிக்கு மேல் எழும்பின.

புயலைத் தொடர்ந்து வடக்கு கரோலினாவில், இடை விடாது கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்கு உள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. அமெரிக்காவின் தேசிய சூறாவளி மையம், புயலின் தாக்கம் குறித்து ஏற்கனவே எச்சரித்திருந்தது.

இதனால், வடக்கு கரோலினாவின் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

எனினும் வடக்கு கரோலினா மாகாணத்தின் பெரும்பாலான நகரங்கள் வெள்ளக்காடாகி இருப்பதால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வடக்கு கரோலினாவை தொடர்ந்து பென்சில்வேனியா, மேரிலேண்ட் மற்றும் நியூயார்க் ஆகிய மாகாணங்களிலும் இசையாஸ் புயல் தனது வேகத்தை காட்டியது.

சூறாவளி காற்று சுழன்றடித்ததில் வீடுகள் மற்றும் கடைகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சாலையில் சரிந்து விழுந்தன.

இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது.

இசையாஸ் புயலால் வடக்கு கரோலினாவில் 2 பேர், பென்சில்வேனியாவில் 2 பேர், மேரிலேண்ட் மற்றும் நியூயார்க் மாகாணங்களில் தலா ஒருவர் என இதுவரை 6 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புயலால் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News