செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - உலக சுகாதார அமைப்பு புகழாரம்

Published On 2020-08-03 22:25 GMT   |   Update On 2020-08-03 22:25 GMT
கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
ஜெனீவா:

உலக சுகாதார அமைப்பின் அவசரகால சுகாதார திட்ட செயல் இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரயான் நேற்று ஜெனீவாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இந்தியாவுக்கு புகழாரம் சூட்டினார்.

அவர் கூறியதாவது:-



கொரோனாவுக்கு சக்திவாய்ந்த தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முன்னணி இடம் வகிக்கிறது. அதுபோல், சக்திவாய்ந்த கொரோனா தடுப்பு மருந்துகளையும் தயாரித்து வருகிறது. எனவே, மொத்தத்தில் சர்வதேச அளவில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது உண்மைதான். ஆனால், இந்தியா பெரிய நாடு, அங்கு 130 கோடி மக்கள் வசிக்கிறார்கள் என்ற கண்ணோட்டத்தில் அதை பார்க்க வேண்டும்.

அதுபோல், கொரோனா பரிசோதனைகளையும் இந்தியா நன்கு செய்துள்ளது. ஏற்கனவே 2 கோடி மாதிரிகளை பரிசோதித்துள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 லட்சம் மாதிரிகளை பரிசோதித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக பரிசோதனைகளை அதிகரித்து வருகிறது. கொரோனா பரிசோதனை மையங்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், இந்தியாவில் கிராமப்புறங்களிலும் கொரோனா பரவி வருவது கவலை அளிக்கிறது. இளைஞர்களையும் தாக்கி வருகிறது. எனவே, நோய் பரவலை தடுப்பதுடன், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் ஆதனோம் கூறுகையில், “கொரோனா பிரச்சினையில் உலக நாடுகள் நம்பிக்கையை இழக்கக்கூடாது. எதிர்காலத்தில் என்ன நடப்பதாக இருந்தாலும், அது நம் கையில்தான் இருக்கிறது“ என்றார்.
Tags:    

Similar News