செய்திகள்
நீதிமன்றம்

சொகுசு காரை வாடகைக்கு எடுத்து சென்ற அமீரக பெண்ணுக்கு ஓராண்டு ஜெயில்

Published On 2020-08-03 13:55 GMT   |   Update On 2020-08-03 13:55 GMT
துபாயில் ஆள்மாறாட்டம் செய்து சொகுசு காரை எடுத்து சென்ற அமீரகத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி துபாய் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
துபாய்:

துபாயில் அமீரக அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை வைத்து வாடகை நிறுவனங்களில் இருந்து பல்வேறு வகையான கார்களை நாள் மற்றும் மாத வாடகைக்கு எடுத்து செல்லலாம். இந்த நிலையில் துபாயில் அல் கூஸ் பகுதியில் வசித்து வரும் அமீரகத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் தனக்கு வாடகைக்கு சொகுசு கார் வேண்டுமென்று ஒரு தனியார் கார் வாடகை நிறுவனத்தை அணுகினார்.

தொலைபேசியில் பேசிய அவர் தனது அமீரக அடையாள அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமத்தை வாட்ஸ் அப்பில் படம் பிடித்து அனுப்பி ஒரு நாளுக்கு சொகுசு கார் வேண்டும். ஒப்பந்தம் கொடுத்து அனுப்புங்கள் என கூறியுள்ளார். இதனை அடுத்து காருடன் சென்ற அந்த நிறுவனத்தின் ஊழியர் அடையாள ஆவண நகல்கள் மற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்து மற்றும் ஒரு நாள் வாடகையான 1,200 திர்ஹாம் பெற்று காரை கொடுத்து விட்டு வந்துள்ளார்.

பிறகு அடுத்த நாளே அமீரகத்தை சேர்ந்த அந்த பெண் தொலைபேசியில் அழைத்து எனக்கு ஒரு மாதத்திற்கு இந்த கார் வேண்டும் என கூறியுள்ளார். நிறுவனத்தாரும் சரி எனக்கூறியுள்ளனர். பிறகு பல மாதங்கள் கடந்தும் அந்த பெண் வாடகையை அளிக்கவில்லை.

இதனால் கொடுக்க வேண்டிய தொகையானது 75 ஆயிரம் திர்ஹாமாக (இந்திய மதிப்பில் ரூ.15 லட்சம்) உயர்ந்தது. அந்த நிறுவனத்தார் கேட்டதற்கு 45 ஆயிரம் திர்ஹாம் தந்து பாக்கி பணத்தை பின்னர் செலுத்தி விடுவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் தரவில்லை.

தொடர்ந்து காரையும் விடாமல், பணத்தையும் தராமல் இழுத்தடித்ததால் அந்த அடையாள ஆவணங்களில் இருந்த முகவரியை வைத்து பர்துபாய் போலீஸ் நிலையத்தில் அந்த நிறுவனத்தினர் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து அந்த அடையாள ஆவணத்தில் உள்ள 46 வயதுடைய பெண்ணை போலீசார் விசாரித்தனர்.

அப்போது, அந்த ஆவணங்கள் தன்னுடையதுதான் என்றும், ஆனால் அந்த ஒப்பந்தத்தில் உள்ள கையெழுத்து தன்னுடையது இல்லை எனக்கூறினார். இதனால் ஆள்மாறாட்டம் நடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், காரை எடுத்து சென்ற பெண்ணின் செல்போன் விவரங்களை காண்பித்தபோது, அந்த பெண் இவர் தன்னுடைய காரை விலைக்கு வேண்டும் எனவும் உங்கள் ஆவணங்களை அனுப்பி வையுங்கள் என கூறினார். அதனால் அனுப்பி வைத்தேன் என கூறினார்.

இதனை அடுத்து ஆள்மாறாட்டம் செய்து காரை வாடகைக்கு எடுத்ததற்காக 33 வயதுடைய அமீரகத்தை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நேற்று துபாய் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதில் ஆள்மாறாட்டம் செய்த அந்த பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 30 ஆயிரம் திர்ஹாம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து அந்த பெண் துபாய் பெண்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News