செய்திகள்
இந்திய வம்சாவளி நடனக் கலைஞர் ராஜீவ் குப்தா

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி நடனக் கலைஞருக்கு உயரிய விருது

Published On 2020-08-01 22:43 GMT   |   Update On 2020-08-01 22:43 GMT
இந்திய வம்சாவளி நடனக் கலைஞர் ராஜீவ் குப்தாவிற்கு இங்கிலாந்தின் உயரிய விருதான பிரதமர் விருது வழங்கப்பட்டுள்ளது.
லண்டன்:

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நடன கலைஞர் ராஜீவ் குப்தா. இவர் அங்கு கடந்த 15 ஆண்டுகளாக நடன பள்ளியை நடத்தி வருகிறார்.

அதன் மூலம் இந்தியாவின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான பாங்க்ரா நடனத்தை கற்றுக் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக இங்கிலாந்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ராஜீவ் குப்தாவின் நடன பள்ளிக்கு பூட்டு போட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாற்று வழியை தேடிய ராஜீவ் குப்தா பாங்க்ரா நடன பயிற்சி வீடியோக்களை ஆன்லைனில் நேரலையில் ஒளிபரப்பினார்.

பாங்க்ரா நடனமானது நடனமாக மட்டும் இல்லாமல் சிறந்த உடற்பயிற்சியாகவும் இருப்பதால் ராஜீவ் குப்தாவின் வீடியோக்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஊரடங்கால் வீட்டில் முடங்கிக் கிடந்தவர்களுக்கு அவரது வீடியோக்கள் புத்துணர்ச்சியை அளித்தது.

இந்த நிலையில் ராஜீவ் குப்தாவின் இந்த சேவையைப் பாராட்டி இங்கிலாந்தின் உயரிய விருதான பிரதமர் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராஜீவ் குப்தா கூறுகையில் “ இந்த விருதைப் பெறுவதற்கு நான் உண்மையிலேயே நன்றி உள்ளவனாக இருக்கிறேன். என்னுடைய ஆன்லைன் நடன வகுப்புகள் இப்படி ஒரு சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை” எனக் கூறினார்.
Tags:    

Similar News