செய்திகள்
ரோவர் விண்கலம்

செவ்வாய் கிரகத்தை நோக்கிய சாதனை பயணத்தில் அமெரிக்காவின் நாசா ரோவர் விண்கலம்

Published On 2020-07-30 13:32 GMT   |   Update On 2020-07-30 13:32 GMT
செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்காவின் நாசா விண்கலம் ரோவர் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலம் ஏவப்பட்டது. ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் அமெரிக்காவின் நாசா விண்கலம் விண்ணில் பாய்ந்தது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்டுள்ள ரோவர் விண்கலத்திற்கு 'பெர்சிசவரன்ஸ்' என்று நாசா, பெயரிட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் மூலம் விடாமுயற்சி எனப் பெயரிடப்பட்ட விண்கலம் ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் விண்ணில் ஏவப்பட்டது. 7 மாத பயணத்திற்குப் பிறகு பிப்ரவரியில் செவ்வாயில் தரையிறங்கும் விண்கலத்தில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கோளின் பாறைகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு உட்படுத்தும் திட்டம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெர்சிசவரன்ஸ்' விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் வரை தங்கி ஆய்வுகளில் ஈடுபடும். செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் என்பது பூமியைப் பொறுத்தவரை 687 நாட்களாகும்.

இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தின் பழைமையான தன்மை குறித்தும், செவ்வாயில் மனிதன் வாழ்வதன் சாத்தியக்கூறுகள் பற்றியும் தரவுகளை சேகரிப்பதோடு மட்டும் அல்லாமல், அங்கிருந்து, பாறை மற்றும் மண் ஆகியவற்றின் மாதிரிகளையும் கொண்டுவரும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.  இந்த விண்கலத்துடன் துளையிடும் இயந்திரம், 23 அதிநவீன கேமராக்கள் மற்றும் இரண்டு மைக்ரோபோன்கள் சேர்க்கப்பட்டுள்ளது.இது  செவ்வாய்க் கோளைக் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற உதவும்.  

இது மனிதகுலத்தின் விண்வெளி ஆய்வு முயற்சிகளுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு விண்வெளி பயணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதன்மூலம் வேற்றுகிரகத்தில் பறக்க இருக்கும் முதல் ஹெலிகாப்டர் எனும் பெருமையை இது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனாவைத் தொடர்ந்து இந்த மாதத்தில் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட மூன்றாவது விண்கலம் இதுவாகும்.
Tags:    

Similar News