செய்திகள்
டோமினிக்கா நாட்டின் எண்ணெய் கப்பலை படத்தில் காணலாம்.

டோமினிக்கா நாட்டின் எண்ணெய் கப்பல் ஈரானுக்கு கடத்தல் - 26 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

Published On 2020-07-16 10:49 GMT   |   Update On 2020-07-16 10:49 GMT
அமீரக கடல் எல்லையில் டோமினிக்கா நாட்டின் எண்ணெய் கப்பல் 28 இந்திய ஊழியர்களுடன் ஈரானுக்கு கடத்தப்பட்டது. இதில் 26 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அபுதாபி:

அமீரகம் சர்வதேச அளவில் பெட்ரோலிய எண்ணெய் போக்குவரத்து மையமாக இருந்து வருகிறது. பல்வேறு மேற்கத்திய மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு செல்லும் கடல் வழிப்பாதையில் அமீரகம் முக்கிய சந்திப்பாக உள்ளது. மேலும் பல்வேறு துறைமுகங்களில் எண்ணெய் கப்பல்கள் பல நாடுகளில் இருந்து வந்து செல்கிறது.

இதில் கடந்த 5-ந் தேதி சார்ஜா கோர்ப்பக்கான் துறைமுகம் அருகே நங்கூரமிடப்பட்டு இருந்த டோமினிக்கா நாட்டு கப்பல் கடத்தப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. டோமினிக்கா நாட்டின் ‘எம்.டி கல்ப் ஸ்கை’ என்ற எண்ணெய் கப்பல் அமீரகம் வழியாக செல்ல அனுமதி கோரப்பட்டது.

ஆனால் ஈரான் எல்லையில் நிலவும் அசாதாரண நிலை மற்றும் அமீரக கடற்படை தடை சட்டத்தின்படி அந்த கப்பல் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்படி மீறினால் அது சர்வதேச விதிமுறைகளை மீறியதாக இருக்கும் என எச்சரிக்கை விடப்பட்டது. ஆனாலும் அமீரக கடல் பரப்பில் வந்த அந்த கப்பலை பாதுகாப்பு காரணங்களுக்காக அமீரகம் கோர்பக்கான் துறைமுகத்தில் கடந்த 4 மாதங்களாக சிறை வைத்தது. ஆனால் அந்த கப்பல் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் வாழ்வாதாரங்கள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து இந்தியா திரும்ப முடிவெடுத்த அந்த கப்பல் குழுவினர் கோர்பக்கான் துறைமுகத்தில் நஙகூரமிட்டு எண்ணெய் கப்பலை இந்தியா நோக்கி செலுத்தினர்.

அமீரகத்தில் இருந்து கடந்த 5-ந் தேதி புறப்பட்ட அந்த கப்பலில் இருந்து கடந்த 8 நாட்களாக ஏ.ஐ.எஸ் எனப்படும் சிக்னல் பெறப்பட்டு வந்தது. ஆனால் திடீரென்று எந்தவிதமான சிக்னலும் கிடைக்காமல் கப்பல் மாயமாக மறைந்தது. இதனை அடுத்து மாயமான கப்பல் குறித்து கடல் சார் மனிதவள மேம்பாட்டு அமைப்பிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து அந்த அமைப்பின் சார்பில் அமீரகத்தில் உள்ள அமெரிக்க தூதரக உதவியுடன் செயற்கைகோள் படங்கள் பெறப்பட்டது. அதில் ஈரான் நாட்டின் ஹார்முஸ் தீவு அருகே அந்த கப்பல் செல்வது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அந்த கப்பல் கடத்தப்பட்டது என்ற தகவலை அமெரிக்கா வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

தற்போது அதில் கப்பல் கேப்டன் ஜோகிந்தர் சிங் உள்ளிட்ட 28 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இதில் அந்த கப்பல் கேப்டனை தொடர்பு கொண்ட கடல்சார் மனிதவள அமைப்பு கப்பல் கடத்தப்பட்டதையும், ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்தது. பிறகு அதில் இருந்த 26 கப்பல் ஊழியர்கள் பத்திரமாக இந்தியா அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 2 பேர் மட்டும் டெஹ்ரான் நகரில் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது டோமினிக்கா, அமீரகம், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் ஒத்துழைப்பில் அந்த கடத்தப்பட்ட கப்பல் குறித்து விசாரணை நடத்தி வருவதாக இங்கிலாந்து நாட்டின் கடல்சார் மனிதவள மேம்பாட்டு குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ஹம்மண்ட் நேற்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News