செய்திகள்
ஊட்டச்சத்து - கோப்புப்படம்

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை 6 கோடி குறைந்தது - ஐ.நா. அறிக்கை

Published On 2020-07-15 07:26 GMT   |   Update On 2020-07-15 07:26 GMT
இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை 6 கோடி குறைந்துள்ளதாக ஐ.நா. சபை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது
நியுயார்க்:

ஐ.நா. சபையில், உலகளாவிய மக்களின் ஊட்டச்சத்து நிலவரம் குறித்த உலக உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து அறிக்கை நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது. ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, விவசாய மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியம், ஐ.நா. குழந்தைகள் நிதியம் ஆகியவை இணைந்து கூட்டாக இந்த அறிக்கையை தயாரித்து உள்ளன. இந்த அறிக்கையில், இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை 6 கோடி குறைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது 2004-2006 ஆண்டுகளில் இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 94 லட்சமாக இருந்தது 2017-2019 ஆண்டுகளில் இது 18 கோடியே 92 லட்சமாக குறைந்துள்ளது. விகிதாசார அடிப்படையில் பார்த்தால் இது 21.7 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக குறைந்துள்ளது. இது சாதகமான அறிகுறி ஆகும்.இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களின் அளவு 2012-ல் 47.8 சதவீதமாக இருந்தது. இது 2019-ல் 34.7 சதவீதமாக குறைந்துள்ளது. ( எண்ணிக்கையில் 6 கோடியே 20 லட்சத்தில் இருந்து 4 கோடியே 3 லட்சமாக குறைந்துள்ளது.)

* 18 வயதுக்கு மேற்பட்டோரில் உடல் பருமன் பிரச்சினை உடையவர்களின் எண்ணிக்கை 2012-ல் 2 கோடியே 52 லட்சம் ஆகும். இது 2016-ல் 3 கோடியே 43 லட்சமாக அதிகரித்துள்ளது. இது உடல் பருமன் பிரச்சினை அதிகரித்து இருப்பதை காட்டுகிறது.

* ரத்த சோகையால் கருவுறுவதில் பாதிப்பை சந்தித்த பெண்களின் எண்ணிக்கை 2012-ம் ஆண்டு 16 கோடியே 56 லட்சமாக இருந்தது. இது 2016-ல் 17 கோடியே 56 லட்சமாக அதிகரித்துள்ளது.

* 5 மாதங்கள் வரையில் தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2012-ம் ஆண்டு 1 கோடியே 12 லட்சமாக இருந்தது. இது 2019-ம் ஆண்டு 1 கோடியே 39 லட்சமாக அதிகரித்தது.

* உலகளவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அல்லது பட்டினிக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 2018-ல் 68 கோடியாக இருந்தது, ஒரே ஆண்டில் 2019-ல் இந்த எண்ணிக்கை 69 கோடியாக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News