செய்திகள்
கொரோனா வைரஸ்

குளிர்காலத்தில் கொரோனா அலையில் 1.20 லட்சம் பேர் பலியாக வாய்ப்பு?

Published On 2020-07-15 07:02 GMT   |   Update On 2020-07-15 07:02 GMT
குளிர்காலத்தில் கொரோனா அலையில் 1.20 லட்சம் பேர் பலியாக வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் அறிக்கை அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாஸ்கோ:

இங்கிலாந்து நாட்டில் கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் தாக்குதலில், இதுவரை சுமார் 45 ஆயிரம் உயிரிழந்து இருக்கிறார்கள். இது அந்த நாட்டு மக்கள் மத்தியில் தீராத சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் இன்னும் கொரோனா வைரஸ் தன் கைவரிசையை காட்டி வருகிறது. இதன் காரணமாக அங்கு பொது சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து சாதனங்களில் முக கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டதுபோல, கடைகளிலும் கட்டாயம் ஆக்கப்படுகிறது.

இந்த நிலையில் வரும் குளிர்காலத்தில் (டிசம்பர்-பிப்ரவரி) இங்கிலாந்தில் கொரோனா அலையின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து அந்த நாட்டின் விஞ்ஞானிகளிடம் தலைமை அறிவியல் ஆலோசகர் பேட்ரிக் வாலன்ஸ் கேட்டுள்ளார்.

அதன்படி விஞ்ஞானிகள் மதிப்பிட்டு ஒரு அறிக்கை அளித்துள்ளனர்.

அந்த அறிக்கையில், “கொரோனா வைரசின் குளிர்கால அலைகள் மிக மோசமாக இருக்கும். இதனால் குறைந்தது 24 ஆயிரத்து 500 முதல் அதிகபட்சம் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை உயிரிழக்க வாய்ப்பு உள்ளது” என கூறப்பட்டுள்ளதாக பி.பி.சி. தெரிவிக்கிறது.

மேலும், “இந்த குளிர்காலத்தில் கொரோனா வைரசின் புதிய அலைகளால் ஏற்படுகிற இறப்பு அதிகளவில் இருக்கும். நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கத்தொடங்கினால், ஆபத்தை குறைக்க முடியும் என்று மாடலிங் அறிவுறுத்துகிறது என சவுதாம்ப்டன் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியின் சுவாச நிபுணர் பேராசிரியர் ஸ்டீபன் ஹோல்கேட் கூறி உள்ளார்” என்றும் பி.பி.சி. கூறுகிறது.

அதே நேரத்தில் இந்த மதிப்பீட்டை செய்துள்ள விஞ்ஞானிகள், எங்களது மதிப்பீடுகள் ஒரு கணிப்பு இல்லை. மாறாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கான வாய்ப்பு என்றும் கூறி எச்சரித்து உள்ளனர்.

மேலும், விஞ்ஞானிகள் மதிப்பீட்டில், அரசு மேற்கொள்ளும் கட்டுப்பாடுகள், கொரோனா தொற்று நோய்க்கான சிகிச்சைகள், தடுப்பூசிகள் கணக்கில் கொள்ளப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று நோயின் இரண்டாவது அலை, இங்கிலாந்தில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உச்சம் தொடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விஞ்ஞானிகளின் கணிப்பு, இங்கிலாந்து வாழ் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News