செய்திகள்
பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ

கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை சாப்பிடும் பிரேசில் அதிபர்

Published On 2020-07-10 08:10 GMT   |   Update On 2020-07-10 08:10 GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அதிபர், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிடுவதாகவும், அது நல்ல பலன் அளிப்பதாகவும் கூறி உள்ளார்.
பிரேசிலியா:

கொரோனா வைரசால் உலகமே அச்சத்தில் இருக்கும் போது மக்கள் சமூக விலகல், முகக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரசாரம் செய்து வந்த பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

லேசான அறிகுறிகளுடன் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். கூட்டங்களில் பங்கேற்காமல், அலுவலக பணிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மேற்கொள்கிறார். 



இந்நிலையில், பிரேசில் அதிபர் பேஸ்புக் நேரலையில் உரையாற்றினார். அப்போது, அவர் நல்ல நிலையில் வழக்கமான உற்சாகத்துடன் காணப்பட்டார். அவருடன் அமைச்சர்கள் அல்லது மூத்த அதிகாரிகள் என யாரும் பங்கேற்கவில்லை. வழக்கமாக அவரை உரையாற்றும்போது உடனிருக்கும் சைகை மொழி மொழிபெயர்ப்பாளரும் இல்லை.

நேரலையில் பேசிய அதிபர், தனக்கு கடந்த வார இறுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்டதில் இருந்தே, தினமும் ஒரு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை சாப்பிடுவதாக தெரிவித்தார். 

‘ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை நன்றாக வேலை செய்கிறது. தற்போது நலமுடன் இருக்கிறேன். கடவுளுக்கு நன்றி. இந்த மருந்தை விமர்சிப்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு மாற்று மருந்தை வழங்கட்டும்’ என்றும் அதிபர் தெரிவித்தார். அதேசமயம் இதை ஹைட்ராக்ஸிகுளோரோகுயினுக்கான பிரச்சாரம் என்பதை அவர் மறுத்தார்.

மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின், பல்வேறு நாடுகளில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது கொரோனாவை தடுக்கும் என்று அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் 17.59 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 69254 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News