செய்திகள்
மாணவர்கள் (கோப்பு படம்)

ஆன்லைன் கல்வி: வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு

Published On 2020-07-07 14:44 GMT   |   Update On 2020-07-07 14:44 GMT
அமெரிக்காவில் தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், ஆன்லைன் கல்வி முறைக்கு மாறினால், அவர்களை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள் வகுப்புகளை தொடங்குவது குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், அனைத்து வகுப்புகளையும் ஆன்லைன் முறைக்கு மாற்ற உள்ளதாக அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன.

பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளது. அப்படி ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டால் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ஐ.சி.இ.,) தெரிவித்துள்ளதாவது:-

கொரோனா பரவலால், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்து பாடப்பிரிவுகளையும் ஆன்லைன் கல்வி முறைக்கு மாற்றி வருகின்றன. அதனால், அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டு மாணவர்கள், ஆன்லைன் கல்வி முறைக்கு மாறி வருகின்றனர். அவ்வாறு ஆன்லைன் கல்விக்கு மாறிய மாணவர்கள், அமெரிக்காவில் தொடர்ந்து தங்க முடியாது.

ஆன்லைன் மூலம் படிப்பதற்கு தங்களை பதிவு செய்த மாணவர்கள், நேரடியாக வகுப்பறையில் கற்கும் வகையில் தங்கள் பாட திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், குடியேற்றம் தொடர்பான விதிமீறல்கள் உள்ளிட்ட சட்ட விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும். அமெரிக்காவில் இருந்து அவர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்வார்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், பல்கலைக் கழக வளாகத்தில் தங்கி இருக்கும் மாணவர்கள் உட்பட அனைவருக்கும் அனைத்து பாடங்களும் இனி ஆன்லைனில் மட்டுமே நடத்தப்படும் என அறிவித்திருக்கிறது. இதனால் இயல்பாகவே வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவின் பல்கலைக் கழகங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News