செய்திகள்
போப் ஆண்டவர்

கொரோனா காலத்தில் உலகளவில் போர் நிறுத்தம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் அழைப்பு

Published On 2020-07-06 03:35 GMT   |   Update On 2020-07-06 03:36 GMT
தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை செய்வதற்கு வசதியாக அமைதி மற்றும் பாதுகாப்பை அனுமதிக்கும் உலகளாவிய போர் நிறுத்தத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விடுத்த அழைப்பு பாராட்டத்தக்கது என்று ஆண்டவர் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
வாடிகன் :

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த காலகட்டத்தில், மனிதாபிமான உதவிகளை பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதற்கு ஏதுவாக 3 மாத காலத்துக்காவது உலக நாடுகளில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ஏற்கனவே கேட்டுக்கொண்டிருந்தார்.

இதையொட்டி கடந்த புதன்கிழமை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்மானமும் நிறைவேற்றியது.

இந்த நிலையில் வாடிகனின் நேற்று நடந்த ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டுக்கு பின்னர் பேசிய போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை பாராட்டினார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை செய்வதற்கு வசதியாக அமைதி மற்றும் பாதுகாப்பை அனுமதிக்கும் உலகளாவிய போர் நிறுத்தத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விடுத்த அழைப்பு பாராட்டத்தக்கது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம், திறம்பட உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
Tags:    

Similar News