செய்திகள்
ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன்

ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் வழங்க ஆஸ்திரேலியா பரிசீலனை

Published On 2020-07-04 06:29 GMT   |   Update On 2020-07-04 06:29 GMT
சீனாவின் புதிய சட்டத்தால் பாதிக்கப் படும் ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.
கான்பெர்ரா:

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, சீனா ஹாங்காங்குக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ், பிரிவினைக்கு குரல் கொடுப்போர், சீனாவுக்கு எதிராக பிரசாரம் செய்வோர் உள்ளிட்டோரை, தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யலாம்.

அத்துடன், சீனாவுக்கு நாடு கடத்தவும் சட்டத்தில் இடமுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சட்டத்தை எதிர்த்து, ஹாங்காங்கில் போராட்டங் கள் நடைபெற்று வருகின்றன.

முதன் முறையாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் இந்த சர்வாதிகார நடவடிக்கைக்கு உலக தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஆனால் சீனா உலகத் தலைவர்களின் குற்றச்சாட்டுகளை மறுப்பதோடு இது சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்று இதில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது என்றும் எச்சரிக்கிறது.

இதனிடையே சீனாவின் இந்த புதிய சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹாங்காங் மக்களுக்கு தஞ்சமளிப்பது உள்ளிட்ட உதவிகளை செய்ய பல நாடுகள் முன்வந்துள்ளன.

ஹாங்காங்கில் இருந்து வரும் அகதிகளுக்கு என தனியாக அகதிகள் முகாமை தாய்லாந்து அமைத்துள்ளது.

இதேபோல் இங்கிலாந்தில் 5 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் விசாவுடன் இருக்கும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஹாங்காங் மக்களுக்கான குடியுரிமையை நீட்டிப்பதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

அந்த வரிசையில் ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் தந்து குடியுரிமை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக, ஆஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார். தலைநகர் கான்பெர்ராவில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இதுகுறித்து ஸ்காட் மாரிசன் கூறியதாவது:-

இங்கிலாந்தை போலவே நாங்களும், சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் தருவது குறித்து பரிசீலித்து வருகிறோம். விரைவில் இதுதொடர்பாக அமைச்சரவையை கூட்டி முடிவு எடுக்கப்படும். இறுதி முடிவு எடுத்த பிறகு முறையான அறிவிப்பை நான் வெளியிடுவேன்.

ஆனால் நாங்கள் ஹாங்காங்குக்கு முழு ஆதரவை வழங்க தயாராகி கொண்டிருக்கிறோமா என்று நீங்கள் கேள்வி எழுப்பினால் நிச்சயமாக நான் ஆம் என்று சொல்வேன். என்றால் இது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நினைக்கிறோம். நாம் ஒரு மக்களாக இருப்பதோடு நடைமுறையில் நாம் கொண்ட கருத்துக்களுடன் ஒத்துபோகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆஸ்திரேலியா ஹாங்காங் மக்களுக்கு தற்காலிக பாதுகாப்பு விசாக்களை வழங்கக் கூடும் என்று தெரிகிறது. இந்த விசா 3 ஆண்டுகள் வரை அகதிகள் ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதி வழங்கவும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் தருவது குறித்து ஆஸ்திரேலியா பரிசீலித்து வருவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அரசின் இந்த நடவடிக்கை சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவை மேலும் சிக்கலாக்கும் என சீன வெளியுறவு அமைச்சகத்தின் துணை இயக்குனர் ஷாவோ லிஜியன் கூறினார்.

இதுபற்றி அவர் கூறுகையில் “ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சரியான பார்வையில் பாருங்கள். சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கான ஒரு சாக்கு போக்காக பார்க்காதீர்கள். தவறான பாதையில் செல்வதை தவிர்க்கவும்“ எனக் கூறினார்.
Tags:    

Similar News