செய்திகள்
விபத்து நடந்த பட்டாசு தொழிற்சாலை

துருக்கி: பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து - 4 பேர் பலி

Published On 2020-07-03 20:29 GMT   |   Update On 2020-07-03 20:29 GMT
துருக்கி நாட்டில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 97 பேர் படுகாயமடைந்தனர்.
இஸ்தான்புல்:

துருக்கி நாட்டின் சஹர்யா மாகாணம் ஹெண்டிக் நகரில் பட்டாசுத்தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. அந்த தொழிற்சாலையில் நேற்று 180-க்கும் அதிகமான தொழிலாளர்கள் நேற்று வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பட்டாசுத்தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக தொழிற்சாலையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும்
பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் கூக்குரலிட்டு வெளியே ஓடினர். இருப்பினும் சில தொழிலாளர்கள் தப்பிக்க முடியாமல் தொழிற்சாலையிலேயே சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தொழிற்சாலைக்குள் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனாலும், இந்த விபத்தில் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த 4 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 97 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News