செய்திகள்
செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணிக்கும் ஹோப் விண்கலத்தின் மாதிரி விளக்க படம்.

ஹோப் விண்கலம் 15-ந் தேதி நள்ளிரவு விண்ணில் ஏவப்படுகிறது

Published On 2020-07-03 08:58 GMT   |   Update On 2020-07-03 08:58 GMT
செவ்வாய் கிரகம் நோக்கி ஹோப் விண்கலம் வருகிற 15-ந்தேதி நள்ளிரவு விண்ணில் ஏவப்பட இருப்பதாக துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
துபாய்:

அமீரக அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் வழிகாட்டுதலில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் அமீரகத்தின் செவ்வாய் கிரக பயண திட்டமானது அறிமுகம் செய்யப்பட்டது. இதில், முதல் முறையாக முற்றிலும் அமீரகத்தில் உருவாக்கப்பட்ட விண்கலம் ஒன்றை இந்த ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. அதுவும் மனிதர்கள் இல்லாமல் அனுப்பப்பட உள்ளது.

இதற்காக ஹோப் என்ற விண்கலத்தை உருவாக்கும் பணியானது கடந்த 2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 200 அமீரக பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பெரும் முயற்சியால் துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தின் சார்பில் இந்த விண்கலம் உருவாக்கப்பட்டது.

இந்த விண்கலம் ஜப்பான் நாட்டின் டனகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஹெச்2ஏ என்ற ராக்கெட் மூலம் வருகிற 15-ந்தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகளில் மின்சாரத்தின் அளவு சரிபார்க்கப்பட்டு தொடர்ந்து சார்ஜ் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது.

விண்கலத்தை ஏவும் பணியில் 450 பொறியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். ஹெச்2ஏ ராக்கெட்டில் 700 கிலோ ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது.

ராக்கெட்டில் ஸ்டார் டிரெக்கர் எனப்படும் உணரும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால், விண்வெளியில் அது செல்லும் திசை, பாதை ஆகியவைகளை தெரிந்துகொள்ள முடியும். விண்கலத்தின் உள்ளே உள்ள கருவிகள், மென்பொருள் செயல்பாடு, சோலார் மின் தகடுகள், தகவல் தொடர்பு சாதனங்கள் என அனைத்தும் தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

இதன் அடுத்தகட்டமாக ராக்கெட்டின் மூக்கு பகுதியில் ஹோப் விண்கலம் பொருத்தப்பட உள்ளது. அடுத்தவாரத்திற்குள் இந்த பணி நிறைவடையும். இந்த பகுதியானது விண்கலத்தை அதிகப்படியான அழுத்தம் மற்றும் வெப்பத்தில் இருந்து பாதுகாப்பதாக உள்ளது.

இந்தநிலையில் ஹோப் விண்கலத்தை விண்ணில் ஏவும் நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 15-ந் தேதி நள்ளிரவு சரியாக 12 மணி 51 நிமிடம் 27 வினாடிக்கு ராக்கெட் புறப்பட நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹெச்2ஏ ராக்கெட் மூலம் பூமியில் இருந்து மணிக்கு 34 ஆயிரத்து 82 கிலோ மீட்டர் வேகத்தில் விண்ணில் ஏவப்படும்.

இந்த விண்கலம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு புவி வட்டப்பாதையில் இருந்து செவ்வாய்கிரகத்தை நோக்கி திருப்பி விடப்பட்டு பயணிக்கும். மொத்தம் 49 கோடியே 35 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த விண்கலம் பயணம் செய்ய உள்ளது. இந்த விண்கலம் முதல் முறையாக செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தை ஆய்வு செய்ய உள்ளது. இதில் வானிலை, காலநிலை, வாயுக்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளும்.

இந்த தகவலை துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News