செய்திகள்
கோப்பு படம்

தென்சீன கடலில் போர் பயிற்சி - சீனாவின் நடவடிக்கைக்கு அமெரிக்க ராணுவம் கடும் எதிர்ப்பு

Published On 2020-07-02 23:36 GMT   |   Update On 2020-07-02 23:36 GMT
தென்சீன கடற்பரப்பில் சீன போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்ட்டகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:

தென் சீன கடற்பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. மேலும், அந்த கடற்பரப்பில் அமைந்துள்ள அண்டை நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜப்பான்,தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சீனா அச்சுறுத்தலாகவும் விளங்கி வருகிறது.      
 
இதற்கிடையில், தென்சீன கடற்பரப்பில் அமைந்துள்ள பரசல் தீவுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 1 ஆம் தேதி முதல் சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

ஆயுதம் தாங்கிய போர் கப்பல்களுடன் நடைபெற்று வரும் இந்த போர் பயிற்சி வரும் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சர்வதேச கடல் பரப்பில் உள்ள பரசல் தீவுகள் பகுதிகளில் சீனா போர் பயிற்சியை மேற்கொள்வது பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாக பிலிப்பைன்ஸ், தைவான் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. 



இந்நிலையில், தென்சீன கடற்பரப்பின் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா போர் பயிற்சியில் ஈடுபடுவது மிகுந்த கவலை அளிக்கும் வகையில் உள்ளது என அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்ட்டகன் தெரிவித்துள்ளது.

மேலும், சீனாவின் இந்த போர் பயிற்சி நடவடிக்கை தென்சீன கடற்பரப்பின் நிலைமையை மேலும் மோசமடையச்செய்யும் என பென்ட்டகன் தெரிவித்துள்ளது.

தென்சீன கடல் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் அமெரிக்காவின் ராணுவம் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை இரு நாட்டுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News