செய்திகள்
கோப்பு படம்

ஹாங்காங்: அமலுக்கு வந்த தேசிய பாதுகாப்பு சட்டம் - முதல் நடவடிக்கையாக 370 பேர் கைது

Published On 2020-07-01 20:23 GMT   |   Update On 2020-07-01 20:23 GMT
சீன தேசிய பாதுகாப்புச்சட்டம் ஹாங்காங்கில் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, முதல் நடவடிக்கையாக போராட்டக்காரர்கள் 370 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹாங்காங்:

சீனாவின் கட்டுபாட்டில் தன்னாட்சி பெற்ற பகுதியாக இருக்கும்
ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

ஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டத்திற்கு எதிராகவும், ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தியும், சீனாவுக்கு ஆதரவான ஹாங்காங் அரசு பதவி விலக வலியுறுத்தியும் போராட்டங்கள் நடந்தன.

இந்த போராட்டத்தை ஒடுக்கும் விதமாக ஹாங்காங்கின் சட்ட மற்றும் ஆட்சியமைப்பில் மாற்றங்கள் செய்வதற்கான, சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா நிறைவேற்றியுள்ளது.

இந்த சட்டம் மூலம் பிரிவினைவாதிகள் மற்றும் தேசவிரோதச் செயல்களைத் தடுப்பதற்கான கூடுதல் சட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். 
மேலும், வெளிநாட்டுத் தலையீடுகள், ஹாங்காங் நகரில் பயங்கரவாதத்தில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கு எதிரான அம்சங்களும் அந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. 

இந்த சட்டத்தின் முக்கிய அம்சமாக ஹாங்காங் அரசின் அனுமதி இல்லாமல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை சீனா நேரடியாக மேற்கொள்ளலாம். 

ஆகையால் ஹாங்காங்கின் சுதந்திர சுயாட்சிக்கு முடிவு கட்டப்படும் என்று ஜனநாயக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு நாடு இரண்டு அமைப்பு என்ற சீன-ஹாங்காங்கின் ஆட்சி நடைமுறை இனி ஒரே நாடு, ஒரே அமைப்பு என்ற நிலைக்கு செல்கிறது.

இந்நிலையில், சீனாவின் தேசிய பாதுகாப்புச்சட்டம் நேற்று முதல் (ஜூலை 1) ஹாங்காங்கில் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹாங்காங் 1997 ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட இதே ஜூலை 1 ஆம் தேதியிலேயே இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட நாளை அனுசரிக்கும் விதமாகவும், புதிதாக அமல்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்புச்சட்டத்தை எதிர்த்தும் நேற்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 370 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஹாங்காங் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தேசிய பாதுகாப்புச்சட்டம் அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே ஹாங்காங் நிர்வாகம் கைது நடவடிக்கையை தொடங்கியுள்ளதால் மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News