செய்திகள்
கர்த்தார்பூர்

கர்தார்பூர் வழித்தடத்தை மீண்டும் திறந்தது பாகிஸ்தான்

Published On 2020-06-30 12:07 GMT   |   Update On 2020-06-30 12:07 GMT
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சீக்கியர்களின் புனித பயணத்துக்கு ஏதுவாக கர்த்தார்பூர் வழித்தடத்தை பாகிஸ்தான் அரசு நேற்று மீண்டும் திறந்தது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளது கர்தார்பூர். சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் தேவ், தமது இறுதி காலத்தை இங்கு கழித்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், அவரது நினைவாக கர்தார்பூரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு 'தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டது. இந்த குருத்வாராவுக்கு செல்வது என்பது சீக்கியர்களின் கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. எனினும், பாகிஸ்தானுக்கு விசா வாங்கி செல்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்ததால் கர்தார்பூர் குருத்வாராவுக்கு இடையே வழித்தடம் அமைக்க இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே 4.7 கிலோ மீட்டர் தூரம் உள்ள கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் பணி முடிவடைந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ந் தேதி திறந்துவைக்கப்பட்டது.

இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா கடந்த மார்ச் மாதம் கர்தார்பூர் வழித்தடத்தை மூடியது. மேலும் பாகிஸ்தானும் அங்கு செல்ல தடை விதித்தது.

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பல்வேறு நாடுகளில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு வருவதால் சீக்கியர்களின் புனித பயணத்துக்கு ஏதுவாக கர்த்தார்பூர் வழித்தடத்தை பாகிஸ்தான் அரசு நேற்று மீண்டும் திறந்தது.

இதுகுறித்து பாகிஸ்தான் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் "பாகிஸ்தான் மற்றும் இந்தியா யாத்திரிகர்களுக்காக கர்தார்பூர் வழித்தடம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்தியாவில் இருந்து யாத்திரிகர்கள் யாரும் கர்தார்பூர் வரவில்லை. யாத்திரிகர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழிபாடு நடத்தி செல்வதற்கான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
Tags:    

Similar News