செய்திகள்
கோப்பு படம்

ஆப்கானிஸ்தான்: கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் மனித உரிமைகள் அமைப்பினர் 2 பேர் பலி

Published On 2020-06-27 15:50 GMT   |   Update On 2020-06-27 15:50 GMT
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் மனித உரிமைகள் அமைப்பின் ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான், ஐ.எஸ். என பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் என அனைத்து தரப்பினர் மீதும் குண்டுவெடிப்பு தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
 
இந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. குறிப்பாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பினரும், அமைதியை நிலைநாட்ட முயற்சிகள் மேற்க்கொண்டு வருகின்றனர். 

இவ்வாறு அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தை நடத்த வரும் மனித உரிமைகள் அமைப்பினர் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், அந்நாட்டின் காபுல் நகரில் மனித உரிமைகள் அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் பயணம் செய்த காரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. 

காரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் அதில் பயணம் செய்த மனித உரிமைகள் அமைப்பினர் இரண்டு பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனாலும், ஊழியர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு மனித உரிமைகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News