செய்திகள்
மூத்த ராணுவ அதிகாரி பிராங்க் மெக்கன்சி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை 8,600 ஆக குறைக்க முடிவு

Published On 2020-06-20 12:08 GMT   |   Update On 2020-06-20 12:08 GMT
ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு வீரர்களின் எண்ணிக்கை 8,600 ஆக குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போர் தொடங்கியதில் இருந்தே ஆப்கானிஸ்தான் அரசு படைக்கு அமெரிக்க ராணுவம் பக்கபலமாக இருந்து வருகிறது.

முடிவில்லாமல் நீண்டு வரும் இந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசின் உதவியோடு தலீபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா அமைதி பேச்சு வார்த்தையை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலீபான் தரப்பு ஏற்றுக்கொண்டது. அமெரிக்காவும் அந்த ஒப்பந்தத்தை ஏற்க தயாராக இருந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் பலியாகினர்.

இதனால் கோபம் அடைந்த டிரம்ப், தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிரடியாக அறிவித்தார். இதனால் அமெரிக்கா மற்றும் தலீபான்கள் இடையே மீண்டும் மோதல் வலுத்தது.

இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணமாக சென்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கி இருப்பதாக அறிவித்தார்.

அதன்படி கத்தார் தலைநகர் தோகாவில் அமெரிக்க அதிகாரிகளுக்கும், தலீபான் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தலீபான் பயங்கரவாத அமைப்பு இருக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதும் திரும்பப் பெறப்படும் என அமெரிக்கா உறுதி அளித்தது. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை 8,600 ஆக குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளுக்கு தலைமை தாங்கும் மூத்த ராணுவ அதிகாரி பிராங்க் மெக்கன்சி கூறியதாவது:

தலீபான் பயங்கரவாதிகளுடன் ஒப்பந்தத்தின்படி ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படை வீரர்களின் எண்ணிக்கையை 8, 600 ஆக குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான போது ஆப்கானிஸ்தானில் 12 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இருந்தனர். ஜூலை மாத இறுதிக்குள் வீரர்களின் எண்ணிக்கை 8,600 ஆக குறைக்கப்படும் என ஒப்பந்தத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் எங்கள் பகுதியை நாங்கள் நிறைவேற்ற இருக்கிறோம். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதும் திரும்பப் பெறப்படும் என்பது ஒப்பந்தத்தின் சாராம்சம். ஜனாதிபதி டிரம்பும் அதையே விரும்புகிறார்.முழு படைகளையும் திரும்பப் பெறுவது தலீபான் பயங்கரவாதிகளின் செல்களைப் பொறுத்தே அமையும்.

நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் ஆப்கானிஸ்தானிலிருந்து எங்கள் தாயகத்திற்கு எதிரான தாக்குதல்கள் உருவாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

பிப்ரவரியில் கையெழுத்தான ஒப்பந்தத்தில் அல்கொய்தா, ஐ.எஸ். என எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் ஆப்கானிஸ்தானை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று தலீபான்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். அவர்கள் அதை முழுமையாக செய்யவில்லை. அதைச் செய்ய அவர்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News