செய்திகள்
லடாக் தொகுதி பா.ஜனதா எம்.பி. ஜம்யங் செரிங் நாம்க்யால்

இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்தது உண்மையா? ராகுல் காந்தி கேள்விக்கு லடாக் எம்.பி. பதில்

Published On 2020-06-11 11:16 GMT   |   Update On 2020-06-11 11:16 GMT
லடாக்கில் இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்தது உண்மையா? என்ற ராகுல் காந்தியின் கேள்விக்கு லடாக் பா.ஜனதா எம்.பி. பதில் அளித்துள்ளார்.
லடாக்:

லடாக்கில் இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது உண்மையா? என்று ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்குக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி விடுத்திருந்தார்.

இந்நிலையில், அவருக்கு லடாக் தொகுதி பா.ஜனதா எம்.பி. ஜம்யங் செரிங் நாம்க்யால் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்தது உண்மைதான். கடந்த 1962-ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அக்சாய் சின் பகுதியில் 37 ஆயிரத்து 244 சதுர கி.மீ. பரப்பளவை சீனா ஆக்கிரமித்தது.

டியா பங்நாக் மற்றும் சாப்ஜி பள்ளத்தாக்கில் 250 கி.மீ. பரப்பளவை 2008-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலம்வரை ஆக்கிரமித்து இருந்தது.

2008-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது, ஜோராவார் கோட்டையை சீன ராணுவம் அழித்தது. 2012-ம் ஆண்டு, சீன ராணுவத்தின் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டது. அங்கு 13 சிமெண்ட் வீடுகள் கட்டப்பட்டன.



2008-ம் ஆண்டு, டூம் செலி என்ற பகுதியை இந்தியா பறிகொடுத்தது. உண்மை நிலவரம் அடிப்படையிலான எனது பதிலை காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் ஏற்றுக்கொண்டு, மக்களை திசைதிருப்புவதை கைவிடுவார்கள் என்று நம்புகிறேன்.

அக்சாய் சின் பகுதியை திரும்பப்பெற வேண்டும் என்ற அமித்ஷாவின் அறிவிப்பை நான் வரவேற்கிறேன். இத்தனை ஆண்டுகள் கழித்து திரும்பப்பெறுவது கடினம்தான். ஆனால், முடியாத விஷயம் அல்ல.

லடாக்கில் வளர்ச்சி இல்லாததுதான், சீனாவின் ஆக்கிரமிப்புக்கு காரணம். எனவே, அங்கு கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து, அங்கு நிரந்தரமாக வாழ மக்களை ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News