செய்திகள்
அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் காந்தி சிலையை சேதப்படுத்தியது அவமானம் -டிரம்ப்

Published On 2020-06-09 10:36 GMT   |   Update On 2020-06-09 10:36 GMT
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இந்திய தூதரகம் அருகே மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது அவமானகரமானது என அதிபர் டிரம்ப் கூறினார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாஷிங்டனில் இந்திய தூதரகம் அருகே உள்ள மகாத்மா காந்தி  சிலையை கடந்த 2ம் தேதி இரவில் மர்ம நபர்கள் சேதப்படுத்தி அவமதித்தனர். இந்த செயலுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனமும், வருத்தமும் தெரிவித்தனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்  வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பின்போது, காந்தி சிலை சேதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சுருக்கமாக பதிலளித்த ட்ரம்ப், சிலையை சேதப்படுத்தியது ‘அவமானம்’ என்றார்.



இதுதொடர்பாக விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை, பெருநகர காவல்துறை மற்றும் தேசிய பூங்கா சேவையிடம் இந்திய தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் அந்த பூங்காவில் மகாத்மா காந்தி சிலையை சரி செய்து விரைவில் திறக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது.

அதிபர் டிரம்ப்பும், மெலனியா டிரம்பும் இந்தியா வந்திருந்த போது, அகமதாபாத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் நேரம் செலவிட்டனர். நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘காந்தியின் ஆஸ்ரமத்தை நானும் மெலானியாவும் பார்த்து மகிழ்ச்சியடைந்தோம். இங்குதான் புகழ்பெற்ற உப்புச் சத்தியாகிரகத்தை அவர் தொடங்கினார்.’ என்றார்.
Tags:    

Similar News