செய்திகள்
லாலிபாப்

ரூ.15 கோடிக்கு லாலிபாப் வாங்க திட்டமிட்ட மடகாஸ்கர் கல்வி மந்திரி நீக்கம்

Published On 2020-06-07 08:22 GMT   |   Update On 2020-06-07 08:22 GMT
மடகாஸ்கர் தீவின் கல்வி மந்திரி 15 கோடி ரூபாயில் லாலிபாப் வாங்க திட்டமிட்டதால், பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியப் பெருங்கடல் தீவு நாடு, மடகாஸ்கர். இங்கு ரிஜாசோவா ஆண்ட்ரியமனனா என்பவர் கல்வி மந்திரியாக இருந்து வந்தார். இவர் பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா வைரசுக்கு சோதித்து அறியப்படாத கசப்பான மூலிகை மருந்துகள் தந்து, அதன் கசப்பை மறைப்பதற்காக தலா 3 ‘லாலிபாப்’ இனிப்புகளை வழங்க முடிவு செய்தார்.
இதற்காக இவர் 2 மில்லியன் டாலர் (சுமார் ரூ.15 கோடி) மதிப்பிலான ‘லாலிபாப்’ இனிப்புகளை வாங்க திட்டமிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த திட்டத்தை அந்த நாட்டின் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா ரத்து செய்து விட்டார்.

மேலும், சர்ச்சையில் சிக்கிய மந்திரி ரிஜாசோவா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நாட்டில் கொரோனா வைரசுக்கு கோவிட் ஆர்கானிக்ஸ் மூலிகை டானிக் பரிந்துரை செய்யப்படுகிறது. பல ஆப்பிரிக்க நாடுகள் இந்த டானிக்கை இறக்குமதி செய்கின்றன. இது கொரோனாவை எதிர்த்து போராட உதவும் என்று நம்புகின்றன. மூலிகை டானிக் மீது எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும், அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா மூலிகை டானிக்குக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்.

இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “ஒரு ஐரோப்பிய நாடு இந்த டானிக்கை தயாரித்து இருந்தால் மேற்கத்திய நாடுகளின் எதிர்வினை வேறுமாதிரியாக இருக்கும்” என கூறி டானிக் மீதான எதிர்மறை விமர்சனங்களை நிராகரித்துள்ளார்.
Tags:    

Similar News