செய்திகள்
மடேய்ரா தீவு

இங்கிலாந்து சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகும் போர்ச்சுக்கல்

Published On 2020-06-03 17:24 GMT   |   Update On 2020-06-03 17:24 GMT
கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால் சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராக இருக்கிறோம் என போர்ச்சுக்கல் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த மார்ச் மாதத்தில் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை மூடியது. மேலும் கட்டுப்பாடுகளையும் விதித்தன.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகள் லாக்டவுனை படிப்படியாக தளர்த்தி வருகிறது.

அந்த வகையில் போர்ச்சுக்கலும் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. போர்ச்சுக்கல் நாடு சுற்றுலாத்துறை மூலம் அதிக வருவாய் ஈட்டி வருகிறது. இதனால் ஜூலை 1-ந்தேதியில் இருந்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கான கட்டுப்பாடுகளையும் மிகப்பெரிய அளவில் தளர்த்த இருக்கிறது.

குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் இருந்து அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கோரன்டைன் கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

உலகளவிலான நாடுகளில் இருந்து சுற்றுலா வருவதற்கு பச்சைக்கொடி காட்டவில்லை என்றாலும், முக்கியமான சில நாடுகளில் இருந்து சுற்றுலா வருவதற்கு ஜூலை 1-ந்தேதியில் இருந்து அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து போர்ச்சுக்கல் வெளியுறவுத்துறை மந்திரி ஆகஸ்டோ சான்டோஸ் சில்வா கூறுகையில் ‘‘போர்ச்சுக்கலுக்கு சுற்றுலாப் பயணிகளை வரவேற்கிறோம். கோடை விடுமுறைக்கு மட்டுமல்ல. சுற்றுலாவுக்கும் இங்கிலாந்து நாட்டினரை வரவேற்கிறோம்.

இங்கிலாந்தில் இருந்து போர்ச்சுக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் இங்கிலாந்துக்கு செல்லும்போது கோரன்டைன் விதிமுறையை கடைபிடிக்காதவாறு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்.

தற்போதைய சூழ்நிலையில் வெளிநாடு சென்று வரும் நபர்கள் இங்கிலாந்தில் கோரன்டைன் விதிமுறையை கடைபிடிக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. ஆனால், வருகிற 8-ந்தேதியில் இருந்து இங்கிலாந்தில் புதிய வழிநாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட இருக்கிறது’’ என்றார்.

போர்ச்சுக்கலின் மடெய்ரா தீவு ஜூலை 1-ந்தேதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வர அனுமதி அளித்துள்ளது. ஆனால், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News