செய்திகள்
கிம் ஜாங் அன்

அணு ஆயுதங்களை மேம்படுத்தும் வடகொரியா?: கிம் ஜாங் அன் தலைமையில் முக்கிய ஆலோசனை

Published On 2020-05-25 02:59 GMT   |   Update On 2020-05-25 02:59 GMT
வடகொரியா தலைநகர் பியாங்காங்கில் நடந்த ஒரு முக்கிய ராணுவ கூட்டத்தில் தலைவர் கிம் ஜாங் அன் கலந்துகொண்டு வட கொரியாவின் அணு ஆயுதங்களை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பியாங்யாங் :

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்ததாகவும் அது தோல்வியடைந்ததால் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் கடந்த மாதம் பல வதந்திகள் பரவின. இதையடுத்து, வட கொரிய அதிபரின் உண்மையான நிலையை அறிந்துகொள்ள பல நாடுகளும் முனைப்புக்காட்டின. இறுதியாக ஒரு உரத் தொழிற்சாலையின் திறப்பு விழாவில் கிம் ஜாங் அன் கலந்துகொண்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் நேற்று வடகொரியா தலைநகர் பியாங்காங்கில் நடந்த ஒரு முக்கிய ராணுவ கூட்டத்தில் தலைவர் கிம் ஜாங் அன் கலந்துகொண்டதாக அந்நாட்டின் அரசு ஊடகம் கே.சி.என்.ஏ செய்தி வெளியிட்டுள்ளது. அந்த கூட்டத்தில் வட கொரியாவின் அணு ஆயுதங்களை மேம்படுத்துவது, நாட்டின் ஆயுதப் படைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் வைப்பது மற்றும் பிறநாட்டிலிருந்து வரும் அச்சுறுதல்களுக்கு எதிராக தங்கள் நாட்டின் சக்தியை அதிகரிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட கொரிய ராணுவத்தின் தலைவர் கிம் ஜாங் அன், துணை தலைவர் பாக் ஜாங் சோன், ஆயுத மேம்பாட்டு பொறுப்பில் இருக்கும் அந்நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி பியோங் சோல் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக கே.சி.என்.ஏ ஊடகம் தெரிவித்துள்ளது. வடகொரியா அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் தன் நாட்டின் அணுசக்தி திறனை மேம்படுத்த கிம் ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News