செய்திகள்
கொரோனாவால் இறந்தவரின் உடலை அப்புறப்படுத்தும் ஊழியர்கள்

அமெரிக்காவில் கட்டுக்கடங்காத கொரோனா- 97 ஆயிரத்தை தாண்டியது உயிரிழப்பு

Published On 2020-05-23 02:55 GMT   |   Update On 2020-05-23 02:55 GMT
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், இந்த வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
வாஷிங்டன்:

உலகம் முழுவதும் 213 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ், மனித குலத்திற்கு பெரும் சவாலாகவே உள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் மிக அதிக அளவில் உள்ளது. மொத்தம் 16.45 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 97,647 பேர் பலியாகி உள்ளனர். 403,201 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தொழில், வர்த்தகம் முடங்கியது. மக்கள் வீடுகளில் முடங்கினர். இதனால் அங்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அந்த நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து போய்விட்டது. இதன்காரணமாக மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் திறந்து விட தொடங்கி உள்ளன.

இதற்கிடையே, 24 மாநிலங்களில், குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய மேற்கு மாநிலங்களில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவக்கூடும் என புதிய ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன. இந்த ஆய்வு இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. எனினும், போதுமான முன்னெச்சரிக்கைகள் இல்லாமல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் இடங்களில் இரண்டாவது அலை நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

ஆனால், கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசினால் நாட்டை முடக்கி போடப்போவது இல்லை என அதிபர் டிரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News