செய்திகள்
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ்

இஸ்ரேல், அமெரிக்காவுடனான ஒப்பந்தங்கள் முடிவுக்கு வருகின்றன - பாலஸ்தீன அதிபர் அறிவிப்பு

Published On 2020-05-21 14:51 GMT   |   Update On 2020-05-21 14:51 GMT
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான அனைத்து ஒப்பந்தங்களும் முடிவுக்கு வருவதாக பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அறிவித்தார்.
ரம்லா:

1967-ம் ஆண்டு மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனத்தின் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குகரை பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீன எழுச்சி உருவானது. இந்த சூழலில் கடந்த 2017-ம் ஆண்டு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அங்கீகரித்தது. இதனால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான மோதல் மேலும் வலுத்தது.

இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதமாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் பாலஸ்தீன அரசு ஒரு சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்த பிரச்சினைக்கு இதுவரை முழுமையான தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில் இஸ்ரேலில் அண்மையில் பொறுப்பேற்ற பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தலைமையிலான ஒற்றுமை அரசு சர்ச்சைக்குரிய மேற்குகரையின் சில பகுதிகளை இஸ்ரேலுடன் இணைப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இந்த நிலையில் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் “இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான அனைத்து ஒப்பந்தங்களும் (பாதுகாப்பு ஒப்பந்தங்கள் உட்பட) முடிவுக்கு வருகின்றன” என அறிவித்தார். மேலும் 2 மாகாணங்களை உருவாக்குவதற்கான முடிவின் அடிப்படையில் இஸ்ரேலுடனான மோதலை தீர்க்க பாலஸ்தீனம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
Tags:    

Similar News