செய்திகள்
டொனால்ட் டிரம்ப்

சீனாவில் இருந்து ஓய்வூதிய முதலீடுகளை திரும்பப்பெற முடிவு- டிரம்ப்

Published On 2020-05-16 06:06 GMT   |   Update On 2020-05-16 06:06 GMT
சீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது என்றும், அந்த நாட்டில் இருந்து ஓய்வூதிய முதலீடுகளை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பீஜிங்:

உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வர்த்தகப்போர் உருவானது. சீன பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் பரஸ்பர வரிவிதித்தன.

இதனால் இருநாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனை சரி செய்ய இருநாடுகளும் வர்த்தக பேச்சுவார்த்தையை தொடங்கின. நீண்ட இழுபறிக்கு பிறகு, கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா-சீனா இடையே முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிலையில் சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் அமெரிக்காவை முற்றிலும் நிலைகுலைய செய்துள்ளது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளின் உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே சீனாவுக்கு கூடுதல் பலன்களை தரும் வகையில் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் விதமாக அமெரிக்காவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக சீனா கூறி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா ஜனாதிபதி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது, சீனாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டிரம்ப் பதில் அளித்து பேசியதாவது:-

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக சீனர்கள் எங்கோ சொன்னார்கள். ஆனால் நாங்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை.

சீனா செய்த காரியங்கள் எதுவும் எனக்கும் மகிழ்ச்சியளிக்கவில்லை. சீனா எப்போதும் அமெரிக்காவின் அறிவுசார் பொருட்களை திருடுகிறது. இதை நான் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன்.

சீனாவுக்கு எதிராக நாங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. நாங்கள் நினைத்தால் சீனாவுடன் முழு உறவையும் துண்டிக்க முடியும். எனக்கும் சீன அதிபர் ஜின்பிங்குக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. ஆனால், தற்போது நான் அவருடன் பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையில், சீனா மீதான அடுத்த கட்ட நடவடிக்கையாக சீனாவில் அமெரிக்க ஓய்வூதிய நிதி முதலீடுகளாக உள்ள பல நூறு கோடி டாலர்கள் நிதியை திரும்ப பெற டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி டிரம்ப் கூறியதாவது:-

சீனாவின் ஓய்வூதிய திட்டத்தில் அமெரிக்கா செய்துள்ள பல நூறு கோடி டாலர்கள் முதலீட்டை திரும்பப்பெற உத்தரவிட்டுள்ளேன். அதே போல் அமெரிக்க பங்குச்சந்தை மற்றும் நாஸ்டாக்கில் சீன நிறுவனங்கள் பட்டியலிடப்படுவதற்கு அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வலியுறுத்தப்படும்.

உதாரணமாக அலிபாபா போன்ற பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் அமெரிக்க நிறுவனங்கள் காட்டுவது போல் இவர்கள் தங்கள் வருவாய் கணக்குகளை காட்டுவதில்லை.

எனவே பட்டியலிடுவதற்கான விதிமுறைகளை கடுமையாக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஆனால் இதைச் செய்வதில் பிரச்சனைகள் உள்ளன. நாம் விதிமுறைகளை கடுமையாக்கினால் சீனா லண்டன் பங்கு சந்தைக்கோ அல்லது வேறு நாட்டு பங்குச் சந்தைக்கோ செல்லும்.

நாம் கடுமையாக இருக்க விரும்புகிறோம், அனைவருமே கடினமாகவே இருப்பார்கள். நான் மிகவும் கடினமானவன். ஆனால் சீனா என்ன செய்யும் ‘சரி நாங்கள் லண்டன், அல்லது ஹாங்காங் பங்குச்சந்தைக்குச் செல்கிறோம்’ என்று கூறும்.

என்ன நடக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News