செய்திகள்
செவிலியர்கள் சோலி வெப், ரெபேக்கா சின்னாரா

இதுதான் உண்மையான அழகு... கொரோனா சவாலுக்கு மத்தியில் மிஸ் இங்கிலாந்து ஆக போட்டி போடும் நர்சுகள்

Published On 2020-05-14 06:21 GMT   |   Update On 2020-05-14 06:21 GMT
பிரிட்டனில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்தியிலும், தேசிய சுகாதார சேவை செவிலியர்கள் இரண்டு பேர் அடுத்த மிஸ் இங்கிலாந்து பட்டத்தை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளனர்.
லண்டன்:

பிரிட்டனில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் தேசிய சுகாதார சேவை மருத்துவர்கள், செவிலியர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு கடும் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது. இந்த பணிச்சுமைக்கு மத்தியிலும் தேசிய சுகாதார சேவையின் செவிலியர்களான ரெபேக்கா சின்னாரா (வயது 22), சோலி வெப் (வயது 24) ஆகிய செவிலியர்கள், மிஸ் இங்கிலாந்து பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளனர். அவர்களுக்கிடையே கடும் போட்டி உள்ளது.

நீண்ட நேரம் மற்றும் கடினமான மருத்துவப் பணி இருந்தபோதிலும், இரண்டு செவிலியர்களும், மிஸ் இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார்கள். தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி மகுடம் சூட்டும் நாளை எதிர்நோக்கி உள்ளனர். 

இந்த போட்டி ஜூலை மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கள் பணிகளை சிறப்பாக செய்வதுடன், மிஸ்அழகி போட்டியிலும் வெல்வோம் என உறுதியாக நம்புகின்றனர்.



புதிதாக படித்து முடித்து பணியில் சேர்ந்துள்ள செவிலியர் சோலி வெப் (நோபோக்) தனது அனுபவம் குறித்து கூறியதாவது:-

சில நேரங்களில் பணி மிக அதிகமாக உள்ளது. இருப்பினும் இதுபோன்ற கடினமான பணியை எளிதாக செய்யும் சிறந்த சுகாதார நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுவதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். கொரோனா தடுப்பு பணிக்காக எனது பங்களிப்பை செய்ததில் பெருமிதம் கொள்கிறேன். 

மிஸ் இங்கிலாந்து அழகிப் போட்டியில் பங்கேற்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன். அது ஒரு வேடிக்கையான அனுபவத்தை கொடுப்பதுடன், பலனளிப்பதாகவும் இருக்கும். எதிர்காலத்தில் நர்சிங் பணியை தொடருவதுடன், புற்றுநோயியல் துறை செவிலியர் ஆகி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனிக்கவும் விரும்புகிறேன். கொரோனா தடுப்பு பணியில் சக செவிலியர்கள் மற்றும் தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் செய்து வரும் அற்புதமான பணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சோலிக்கு போட்டியாளராக விளங்கும் மற்றொரு செவிலியரான ரெபேக்கா, மிடில்செக்ஸ் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் நலப்பிரிவு செவிலியர். இவர் தனது பணி குறித்து கூறுகையில், ‘இது எளிதானது அல்ல, ஆனால் இப்போது நான் இருக்க வேண்டிய இடம் என் நோயாளிகளுடன் தான்; வேறு இடம் இல்லை’ என்றார். மேலும், மனநல ஆரோக்கியத்தைப் பற்றி அதிகமானவர்களைப் பேச வைப்பதற்காக, இந்த போட்டியைப் பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

தனது முக்கிய நோக்கத்தை உலகளாவிய தளத்திற்கு கொண்டு வர வாய்ப்பாக உள்ளதா இந்த போட்டியில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், இது குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே மனநல விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.

பிரிட்டனில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஓய்வு பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணிக்கு வருமாறு அந்நாட்டு தேசிய சுகாதார சேவை கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி பலரும் பணிக்கு திரும்பி உள்ளனர். 

தற்போது மிஸ் இங்கிலாந்தாக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மருத்துவர் பாஷா முகர்ஜியும், மருத்துவ பணியில் இணைந்துள்ளார். அவர்களுடன் மிஸ் இங்கிலாந்து போட்டியில் உள்ள இரண்டு செவிலியர்களும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News