செய்திகள்
டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜிங் பிங்

சீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையா? டிரம்ப் பதில்

Published On 2020-05-13 07:27 GMT   |   Update On 2020-05-13 07:27 GMT
சீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறீர்களா? என்ற நிருபரின் கேள்விக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதில் அளித்துள்ளார்.
பீஜிங்:

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக வர்த்தக போர் நீடித்தது. இது தொடர்பாக நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனிடையே கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்சினையில் சீனாவுக்கும், அமெரிக்காவும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இது இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்திலும் எதிரொலித்து வருகிறது.

இந்த நிலையில் சீனாவுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த அமெரிக்காவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையை தொடங்க சீனா விரும்புவதாக அந்த நாட்டு ஊடகத்தில் செய்தி வெளியானது.



இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம், “சீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறீர்களா?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிரம்ப், “இல்லை. எனக்கு அந்த எண்ணமே இல்லை. அதில் எனக்கு துளியும் ஆர்வம் இல்லை. கையெழுத்திட்ட வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஏற்ப அவர்கள் நடந்து கொள்கிறார்களா என்று பார்ப்போம்” என கூறினார்.

முன்னதாக வர்த்தக ஒப்பந்தத்தின்படி சீனா, வரும் 2 ஆண்டுகளில் அமெரிக்காவிடம் இருந்து கூடுதலாக 200 பில்லியன் டாலர் அளவுக்கு இறுக்குமதி செய்யவேண்டும் என்றும் அதனை மீறினால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க நிதித்துறை மந்திரி ஸ்டீவன் முனுச்சின் எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News