செய்திகள்
கோப்பு படம்

கொரோனா வைரசால் கனடாவில் 30 லட்சம் பேர் வேலை இழப்பு

Published On 2020-05-10 03:55 GMT   |   Update On 2020-05-10 03:55 GMT
கனடாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு போடப்பட்டதால் இதுவரை 30 லட்சம் பேர் வேலைகளை இழந்துள்ளனர்.
ஒட்டவா:

கனடாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு போடப்பட்டது. அங்கு மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதுடன், தொழில், வணிக நிறுவனங்கள் செயல்படவில்லை. இதன் காரணமாக அங்கு வேலையில்லா திண்டாட்டம் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரை அங்கு 30 லட்சம் பேர் வேலைகளை இழந்துள்ளனர்.

வேலையில்லா திண்டாட்ட விகிதாசாரம் 5.2 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக உயர்ந்துள்ளது. 1982-ம் ஆண்டுக்கு பிறகு இரண்டாவது உயர்ந்த வீதம் இதுதான் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கொரோனா வைரஸ் பிரச்சினையால் தொழில், வணிக நிறுவனங்கள் மூடலே இந்த நிலைமைக்கு காரணம் ஆகும்.

இருப்பினும் ஊழியர்களை நிறுவனங்கள் தொடர்ந்து சம்பள பட்டியலில் வைத்திருப்பதற்காக கனடா அரசு ஒரு மானிய திட்டத்தை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, நிறுவன அதிபர்கள் வாரம் 1-க்கு 610 டாலருக்கு மிகாமல் (சுமார் ரூ.45 ஆயிரம்) ஒரு ஊழியரின் ஊதியத்தில் 75 சதவீதத்தை 12 வாரங்களுக்கு அரசிடம் இருந்து மானியமாக பெற முடியும். இந்த திட்டம் அடுத்த மாதம் 6-ந் தேதி முடிவுக்கு வர இருந்தது.

இந்தநிலையில் நிருபர்களிடம் பேசிய அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “நமது பொருளாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் ஏற்ற வகையில் சம்பள மானிய திட்டம் நீட்டிக்கப்படும்” என அறிவித்துள்ளார்.

இதன்கீழ் கடந்த வியாழக்கிழமை வரையில் 1 லட்சத்து 20 ஆயிரம் நிறுவனங்கள், மொத்தம் 17 லட்சம் ஊழியர்களுக்காக விண்ணப்பித்துள்ளன.
Tags:    

Similar News