செய்திகள்
அமேசான் பழங்குடியினர் - கோப்புப்படம்

கொரோனாவால் அழியும் அபாயத்தில் அமேசான் பழங்குடியினர்

Published On 2020-05-07 09:12 GMT   |   Update On 2020-05-07 09:12 GMT
கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் அமேசான் காடுகளில் வாழும் உலகம் தெரியாத அப்பாவி பழங்குடியின மக்களுக்கும் ஆபத்து அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
21- ம் நூற்றாண்டில் மனித குலத்துக்கு மாபெரும் சவாலாக உருவெடுத்திருப்பது, கொரோனா வைரஸ். இதன் ஆக்டோபஸ் கரத்தால் தீண்டப்பட்டு உலக மக்கள் வாழ்வா, சாவா? போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இத்தகைய மோசமான சூழலில், கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் அமேசான் காடுகளில் வாழும் உலகம் தெரியாத அப்பாவி பழங்குடியின மக்களுக்கும் ஆபத்து அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.


தென் அமெரிக்க நாடான பிரேசிலின் பெரும்பாலான பகுதிகளில்தான் உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் மழைக்காடுகள் உள்ளன.



பசுமை போர்த்தி காட்சியளிக்கும் இந்தக் காடுகளில் 300-க்கும் மேற்பட்ட பழங்குடியினத்தை சார்ந்த லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளி உலகத்தோடு இன்னும் தொடர்புக்கே வராதவர்கள். பழமை சிறிதும் குன்றாமல் குடிசை அமைத்து தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்து வருபவர்கள்.

இருப்பினும் கொரோனா வைரசின் கொடிய பார்வை இவர்கள் பக்கமும் திரும்பி உள்ளது. பழமை மாறா பழங்குடியின மக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், பலியாகியும் வருகின்றனர்.

வெளி உலகத்தோடு சிறிதும் பிணைப்பற்ற இவர்களும் வைரஸ் தாக்குதலால் பாதிப்படைவதற்கு யார் காரணம் என்று கேட்டால், நம்மைப் போன்ற நவீன யுக மக்களே!. அமேசான் காடுகளில் மரம் வெட்டுதல், வேட்டையாடுதல், சுரங்கத் தொழில் உள்ளிட்ட பல சட்ட விரோத பணிகள் காலம் காலமாக நடந்து வருகின்றன.

இத்தகைய பணிகளில் ஈடுபடும் வெளியாட்கள் மூலம் பழங்குடியினருக்கு இறக்குமதி செய்யப்படும் கொரோனா, அப்பாவி பழங்குடிகளை பாதித்து வருகிறது. கடந்த ஆண்டு அமேசான் காடுகளில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத காட்டுத் தீ, பழங்குடியின மக்களுக்கு கடுமையான பாதிப்பை விளைவித்தது.

அந்த ரணமே இன்னும் ஆறாத நிலையில், புதிதாக பரவி வரும் இந்த நோய்த் தொற்று பூர்வீக பழங்குடியினரின் வாழ்க்கையை பெரிதும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

ஆண்டாண்டு காலமாக அமேசான் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் கொரோனா பாதிப்புக்கு ஆளாவது அதிர்ச்சி அளிப்பதாகவும், வைரஸ் பரவல் அதிகமானால் அவர்களின் இனமே அழிந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் உலகெங்கும் உள்ள சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வைரஸ் பாதிப்பிலிருந்து பழங்குடியினரை பாதுகாக்க பிரேசில் நாட்டு அரசு அக்கறை காட்ட வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரேசிலை சேர்ந்த புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரும், சமூக ஆர்வலருமான செபாஸ்டியோ சால்கடோ, அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனோராவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், “ஐரோப்பிய காலனியவாதிகளால் பரப்பப்பட்ட தொற்று நோய்களால் 5 நூற்றாண்டுகளுக்கு முன்பு அமேசான் பழங்குடி இனம் பெரும் அழிவைச் சந்தித்தது. தற்போது தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றை எதிர்கொள்ள முடியாமல் அமேசான் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் முழுமையாக அழிந்து போகலாம். அவர்களின் பிழைப்புக்கு தீவிர அச்சுறுத்தலாக கொரோனா மாறியுள்ளது. பிரேசில் தனது பூர்வ குடிகளுக்கு கடமைப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், “அமேசான் காடுகளில் நடைபெறும் சட்ட விரோத செயல்களை உடனடியாக தடுத்து பழங்குடியினரை வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்” என்றும் அவர் கூறி உள்ளார்.

சால்கடோ, அமேசான் பழங்குடியினரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியவர். ‘யுனிசெப்’ அமைப்பின் நல்லெண்ண தூதராகவும் உள்ளவர்.

கொரோனா வைரசால் ஒட்டுமொத்த அமேசான் பழங்குடியினர்களும் அழியும் அபாயத்தில் உள்ளதாக அவர் கூறியிருப்பது சமூக ஆர்வலர்களை மேலும் கலக்கம் அடையச் செய்துள்ளது.

கொடிய கொரோனாவால் இன்னும் என்னவெல்லாம் நடக்க காத்திருக்கிறதோ?...

Tags:    

Similar News